காஞ்சிபுரமத்தில் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சதிக்கல் சிற்பம் கண்டெடுப்பு.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி கிராமத்தில், 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் சிற்பம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பின்னணி (சதிக்கல் என்றால் என்ன?)
பண்டைய காலத்தில் போரிலோ அல்லது ஊரைக் காக்கும் முயற்சியிலோ வீரன் ஒருவன் இறந்துபோகும்போது, அவனது நினைவாக நடுகல் நடுவது வழக்கம். அவ்வாறு இறந்துபட்ட வீரனுடன் அவனது மனைவியும் உடன்கட்டை ஏறி (தீப்பாய்ந்து) உயிர்விட்டால், இருவரையும் சேர்த்து ஒரே கல்லில் செதுக்கி வழிபடுவார்கள். இதையே சதிக்கல் அல்லது மாசதிக்கல் என்று அழைக்கிறோம். புத்தேரி கிராமத்தில் கண்டறியப்பட்ட கல்லும் இத்தகைய ஒரு வீரத்தாயின் தியாகத்தைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டதாகும்.
காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி கிராமத்தில், வரலாற்று ஆய்வாளரும், சென்னை துாய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியருமான அன்பழகன் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது புத்தேரி சாலையோரம் சதிக்கல் சிற்பம் ஒன்றை கண்டறிந்தார்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் மற்றும் உதவி பேராசிரியர் அன்பழகன் கூறியதாவது:
புத்தேரி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சதிக்கல் சிற்பம், 46 செ.மீ., உயரமும், 36 செ.மீ., அகலமும் உள்ளது. இந்த சதிக்கல் சிற்பத்தில், வீரன் ஒருவருடன், அவரது மனைவி இடப்புற பகுதியில் உள்ளார்.
வலப்புறத்தில் கம்பீரமான தோற்றத்துடன் நிற்கும் வீரன், இரண்டு கைகளையும் வணங்கிய நிலையில் உள்ளது. வீரனின் இடப்பக்கம் நிற்கும் பெண்சிற்பத்தின் இடதுகை தொங்கவிடப்பட்டுள்ள நிலையிலும், வலதுகை மலர்மொட்டு ஒன்றை உயர்த்தி பிடித்துள்ளது.
இருவரின் கைகள் தோள்கள், தோள்பட்டை கழுத்து மற்றும் மார்புப் பகுதிகளில் அணிகலன்களும் காதுகளில் மிகத் தடிமனான காதணிகளும் காணப்படுகின்றன. பட்டாடை அணிந்துள்ளள் இருவரின் தலையில் உள்ள கொண்டைகளும் இடப்பக்கம் உள்ளது. இச்சிற்பத்தில் சில பகுதிகள் சிதைந்துள்ளன.
கல்வெட்டு எழுத்துகள் எதுவுமற்ற இச்சதிக்கல் சிற்பத்தின் காலம் கி.பி.15ம் நுாற்றாண்டாக இருக்கலாம்.
இத்தகவலின் உண்மைத் தன்மையை காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் சு.உமாசங்கர் உறுதி செய்துள்ளார்.