காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தல்...
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், செவிலிமேடு பகுதியில் பாலாற்றின் கரையில் ராமானுஜர் கோவில் அமைந்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இக்கோவில் வளாகத்தில் உள்ள சாலைக்கிணறு என்ற புனிதக் கிணற்றில் இருந்து ராமானுஜர் தினமும் நீர் எடுத்துச் சென்று காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு திருப்பணிகள் செய்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. இக்கோவில் வளாகத்தில் இருந்து காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலின் ராஜகோபுரம் தெளிவாகத் தெரியும்.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இக்கோவிலில் நடைபெறும் அனுஷ்டான குளம் உத்சவத்தின்போது, வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வேடுவர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது.
ராமானுஜரின் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, மாதந்தோறும் திருவாதிரை திருநட்சத்திர தினத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது.
சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படும் இக்கோவிலின் சுற்றுச்சுவரில் செடிகள் வளர்ந்துள்ளதுடன், மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்படும் நிலையும் காணப்படுகிறது. மேலும், சில கட்டடப் பகுதிகள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கோவிலை புனரமைக்க முடிவு செய்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், 2024ஆம் ஆண்டு கோவிலில் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து திருப்பணிக்கான மதிப்பீட்டைத் தயாரித்தனர். ஆய்வுப் பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை திருப்பணிகள் தொடங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்படும் பல்வேறு கோவில்களில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், செவிலிமேடு ராமானுஜர் கோவிலில் இதுவரை திருப்பணி தொடங்கப்படவில்லை என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, செவிலிமேடு ராமானுஜர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலில் திருப்பணிக்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் திருப்பணி தொடங்கப்பட உள்ளது,” என்றார்.
