தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.50-ஆக நிர்ணயம்! அரசாணை வெளியீடு...
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம்: குறைந்தபட்சக் கட்டணம் ரூ.50
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்சக் கட்டணம் ரூ.50 ஆகவும், கூடுதலாகப் பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.25 ஆகவும் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை பெருநகரப் பகுதி மட்டுமின்றி, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் ஆட்டோக்களுக்கான கட்டண விகிதங்களை நிர்ணயித்து நடைமுறைப்படுத்த மாநிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசின் உள்துறை (போக்குவரத்து-1) சார்பில் அரசாணை எண் 366, அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது.
புதிய கட்டண விவரங்கள்
புதிய கட்டண விகிதங்களின்படி, முதல் 1.8 கிலோமீட்டர் தொலைவுக்கான குறைந்தபட்சக் கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும்.
மலைப்பாதைகளில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு அடிப்படைக் கட்டணம் ரூ.60 ஆகவும், கூடுதலாகப் பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தைவிட ஒன்றரை மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் காத்திருப்புக் கட்டணமாக ஒரு நிமிடத்துக்கு ரூ.1 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டண மாற்றம்
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான கட்டண விகிதங்கள் கடைசியாக 2013ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி, முதல் 1.8 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.25-ம், அதற்குப் பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.12-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
எரிபொருள் விலை, வாகனப் பராமரிப்புச் செலவு, காப்பீட்டுக் கட்டணம் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளதால், ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஓட்டுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதுதொடர்பாக, கடந்த ஜூலை மாதம் போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்திலும் கட்டண உயர்வு தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றன.
ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் முதல் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.60 முதல் ரூ.70 வரை குறைந்தபட்சக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், கூடுதல் கிலோமீட்டருக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தன. நுகர்வோர் அமைப்புகள் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தன.
இதனிடையே, செப்டம்பர் மாதம் மாவட்ட அளவில் கருத்துக் கேட்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், ஆட்டோக்களுக்கான புதிய கட்டண விகிதங்களை நிர்ணயித்து தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுநர் சங்கம் நன்றி
இதுகுறித்து, ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் கூட்டுக் குழுத் தலைவர் அ. ஜாஹிர் ஹுசைன் வெளியிட்ட அறிக்கையில், நீண்டகாலமாக மாற்றியமைக்கப்படாமல் இருந்த ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற ஓட்டுநர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த முதல்வர், துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்துத் துறை ஆணையர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
