முதல்வர் வசம் உள்ள துறையில் 50க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து!
கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட டெண்டர்களில் ஏகப்பட்ட முறைகேடு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருந்தன. இப்படி இருக்கையில், முதலமைச்சர் விஜய் வசம் உள்ள நகராட்சி நிர்வாக துறையில் 50க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
டெண்டர்கள் கோர குறுகிய காலமே அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாக விமர்சனங்கள் எழுந்திருந்தன. இதையடுத்து நிர்வாக காரணங்களுக்காக இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிரடி நடவடிக்கை
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், லஞ்சம் ஒழிப்பு குறித்து தீவிரமாக பேசி வருகிறார். கடந்த 60 ஆண்டு கால திராவிட ஆட்சியில், லஞ்சம் பெரிய அளவில் சமூகத்தை அரித்திருக்கிறது என்றும், லஞ்சம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையும் என்றும் முதல்வர் விஜய் கூறியிருந்தார். அதன்படி கடந்த ஆட்சியில் போடப்பட்ட டெண்டர்கள் குறித்து ஆய்வை தீவிரப்படுத்தியிருந்தார். துறை ரீதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது வந்தது.
ஆய்வில் பல டெண்டர்கள் போதுமான கால அவகாசத்துடன் வழங்கப்படவில்லை என்றும், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் தெரிய வந்திருக்கிறது. அதாவது டெண்டர் அறிவிக்கப்பட்டு 1-3 நாட்கள் வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து இந்த டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தற்போது முதலமைச்சர் விஜய் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் 50க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. கோத்தகிரி நகராட்சியில் 3 டெண்டர்கள், செங்கம் நகராட்சியில் 2 டெண்டர்கள், உடுமலைப்பேட்டை நகராட்சியில் 30 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்ன. இது தவிர, மணப்பாறை, பெரம்பலூர், திருவள்ளூர், திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளில் 20க்கும் மேற்பட்ட டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.