தீபாவளி பண்டிகை: ரேஷனில் இலவச வேட்டி , சேலை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியம் பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுவதாக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
பொதுவாக பொங்கல் பண்டிகையின் போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். ஆனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியம் பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறை அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை விநியோகம் தொடங்கியுள்ளது. நவம்பர் 7ஆம் தேதி வரை இந்த விநியோகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக வேட்டி, சேலைகள் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
எனவே, முதியோர் ஓய்வூதியம் பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் நவம்பர் 7ஆம் தேதிக்குள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று இலவச வேட்டி, சேலையை பெற்றுக்கொள்ளலாம். ரேஷன் அட்டையை கொண்டு சென்ற பிறகு கைவிரல் ரேகை சரிபார்ப்பின் மூலம் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நேரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பயனாளர்கள் முன்கூட்டியே ரேஷன் கடைகளுக்குச் சென்று இலவச வேட்டி, சேலையை பெற்றுக்கொள்ளுமாறு கூட்டுறவுத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
