மின்சார மீட்டர் குறித்து குட்நியூஸ்.. மின்சார வாரியம் வெளியிட்ட இரண்டு முக்கிய அறிவிப்பு
ஜூலை 16: குறைபாடுகளுடன் கூடிய மின்சார மீட்டர்களை மாற்றித்தர 6 மாத காலம் அலைக்கழிப்பதாக புகார்கள் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் மின் மீட்டர்களை மாற்றுவதற்கு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்த விவரங்களையும், தமிழ்நாடு முழுவதும் மாவட்டம், மண்டலங்களில் மீட்டர்களின் இருப்பு நிலவரம் குறித்த விவரங்களையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு சேவைகளை சட்டவிரோதமாக மீண்டும் செயல்படுத்துதல் தொடர்பான (ஐ.ஆர்.டி.சி.) அறிக்கைகளை ஆய்வு செய்ததில், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும், மின் நுகர்வு பதிவாகும் சேவைகளின் எண்ணிக்கை, குறிப்பாக சென்னை மண்டலத்தில் கணிசமாக அதிகரிப்பது தெரியவருகிறது. இதுபற்றி மேற்பார்வை பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும்' என்று தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முதன்மை நிதி கட்டுப்பாட்டாளர் ஆர்.கிருஷ்ணசாமி, அனைத்து மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறுகையில், "துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு சேவைகளை சட்டவிரோதமாக மீண்டும் செயல்படுத்துதல் தொடர்பான (ஐ.ஆர்.டி.சி.) அறிக்கைகளை ஆய்வு செய்ததில், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும், மின் நுகர்வு பதிவாகும் சேவைகளின் எண்ணிக்கை, குறிப்பாக சென்னை மண்டலத்தில் கணிசமாக அதிகரிப்பது தெரியவருகிறது. இது வருவாய், பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு மேலாண்மை ஆகிய இரு கோணங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் மின் நுகர்வு நிகழ்வது, நியாயமான வருவாய் இழப்பை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல், நேரடி மின் இணைப்பு துண்டிப்பு நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு வழிமுறைகளை செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய சூழல்களில், இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் நுகர்வோர் கூடுதல் கட்டணம் மற்றும் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இது பெரும்பாலும் நுகர்வோர் குறைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் வழிவகுக்கிறது. எனவே, அனைத்து மேற்பார்வை பொறியாளர்களும் தங்கள் பகுதியில் நிலுவையில் உள்ள ஐ.ஆர்.டி.சி. வழக்குகளை நேரில் ஆய்வு செய்து, உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் மின் நுகர்வு பதிவாகும் சேவைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய வழக்குகளை முறைப்படுத்தவும், வருவாய் இழப்பை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இணைப்பு துண்டிப்பு சரிபார்த்தல், முறையான நேரடி இணைப்பு துண்டிப்பை உறுதி செய்தல் மற்றும் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளிலும் தொடர் நடவடிக்கைகள், நிலுவையில் இருப்பதற்கான காரணங்கள் ஆராய வேண்டும். குறைபாடுகள் கண்டறியப்படும் இடங்களில் தகுந்த நடவடிக்கைகள் தொடங்க உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.