'ரீல்ஸ்' வீடியோ எடுக்கும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ரயில்வே துறை!!
இந்திய இரயில்வே இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்; ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது; 12.54 இலட்சம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 67,956 கிலோமீட்டர்களாகும். இது தினமும் 14,444 தொடருந்துகளை இயக்குகிறது.
தொடர்வண்டி, 1853-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-ல் இந்தியச் சுதந்திரத்தின் போது மொத்தம் 42 தொடர்வண்டி அமைப்புகள் இருந்தன. 1951-ல் அவை தேசியமயமாக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டபோது, உலகின் மிகப்பெரிய வலையமைப்புகளில் ஒன்றாக உருவானது. இந்திய இரயில்வேயால் தொலைதூர இரயில்கள், புறநகர் இரயில்கள் ஆகிய இரண்டுமே இயக்கப்படுகின்றன.
ஓடும் ரயிலில் தொங்கியபடி 'ரீல்ஸ்' வீடியோ எடுக்கும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ரயில்வே துறை. சமீப காலமாக, இளம் தலைமுறையினரிடையே 'ரீல்ஸ்' எடுக்கும் மோகம் அதிகரித்துள்ளது. இதனால், ஓடும் ரயிலின் கைப்பிடி கம்பிகளைப் பிடித்துக்கொண்டு ஸ்டைலாக வீடியோ எடுக்கும் போக்கு காணப்படுகிறது. இது கடைசி நேரத்தில் ரயிலைப் பிடிக்க வரும் பயணிகளுக்கும், படிக்கட்டில் ஏற முயற்சிப்பவர்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கிறது.
சேலம் கோட்டத்தில் மட்டும் கடந்த ஐந்து மாதங்களில், இது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டதாக 268 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோருக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். குறிப்பாக, போத்தனுார் மற்றும் கோவை ரயில்வே ஸ்டேஷன்களில் மட்டும் 13 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.,) கூறுகையில், 'ரீல்ஸ்' எடுக்கும் மோகத்தில், ரயில் வரும்போது தண்டவாளம் அருகே நின்று, ஓடும் ரயிலின் படியில் ஆபத்தான முறையில் வீடியோ எடுப்பது அவர்களுக்கே விபரீதமாக முடிகிறது. கூட்டம் இல்லாத சமயத்திலும் படிக்கட்டு கைப்பிடியைப் பிடித்து பயணம் செய்வது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால், ரூ.1,000 அபராதம் அல்லது ஆறு மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். சேலம் கோட்டத்தில் உள்ள 94 ரயில் நிலையங்களில் இந்த ஐந்து மாதங்களில் 268 வழக்குகள் பதியப்பட்டுள்ளன' என்று தெரிவித்தனர்.
எனவே, ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் வீடியோ எடுப்பது, படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் பயணிகளை அறிவுறுத்தியுள்ளது. இது போன்ற செயல்கள் உங்களுக்கும் மற்ற பயணிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.