காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த புதிய திட்டப் பணிகள்.....
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான பல்வேறு வசதிகள், சோழமண்டலம் நிறுவனம் மூலம் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு, நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கைலாசநாதர் கோவிலில், பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், கோவிலின் வரலாற்றுச் சிறப்புகளை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் பைனான்ஸ் நிறுவனம், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தொல்லியல் துறையுடன் இணைந்து, கைலாசநாதர் கோவிலில் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
மத்திய அரசின் 'பாரம்பரியத்தை தத்தெடு 2.0' திட்டத்தின் கீழ், தமிழகத்தில் முதன்முறையாக கைலாசநாதர் கோவில் தத்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கோவிலின் பாரம்பரியச் சிறப்புகளைப் பாதுகாப்பது, பார்வையாளர்களுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துவது, கோவிலின் வரலாறு மற்றும் சிறப்புகளை விளக்கும் காட்சிகளை அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், பார்வையாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோவில் வளாகத்தை அழகுபடுத்துதல் மற்றும் தொடர்ந்து பராமரிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய வசதிகளை பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி, கோவில் வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் வெள்ளையன் சுப்பையா, மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்திர குமார் குண்டு, மத்திய தொல்லியல் துறையின் டைரக்டர் ஜெனரல் யாதுபிர் சிங் ராவத், வெங்கடாசலம், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா துணை வேந்தர் சீனிவாசன், எம்.ஏ.எம்.அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய வசதிகள் மூலம் கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள், கைலாசநாதர் கோவிலின் வரலாற்றுப் பின்னணி, கட்டடக்கலைச் சிறப்புகள் மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் குறித்து எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
மத்திய தொல்லியல் துறையின் டைரக்டர் ஜெனரல் யாதுபிர் சிங் ராவத் பேசுகையில், “இந்தியாவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் 4,000 பாரம்பரியச் சின்னங்கள் உள்ளன. பழங்கால ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் கலைகளைப் புதுப்பித்து பாதுகாப்பது, நமது வரலாற்றை எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்க்க உதவும். மக்கள் ஒன்றிணைந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்ளும் இடங்களாக இதுபோன்ற இடங்கள் விளங்குகின்றன” என்றார்.
