காஞ்சிபுரத்தில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்க, ‘கும்டா’!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்க, ‘கும்டா’ எனப்படும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்து, மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. நிலம் கையகப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 80 கோடி ரூபாய் வரை தேவைப்படும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த, போலீசாரும் உயர் அதிகாரிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், காந்தி ரோடு, ராஜ வீதிகள், மேட்டுத் தெரு மற்றும் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்றாடம் போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகிறது.
இதனால், காஞ்சிபுரம் நகரின் போக்குவரத்துச் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு, ‘கும்டா’ எனப்படும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்திடம் மாவட்ட ஆட்சியர் சினேகா கேட்டுக்கொண்டார்.
அதன்படி, கடந்த ஜூலை மாதம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் சினேகாவிடம் 39 பக்க அறிக்கையை கும்டா சமர்ப்பித்துள்ளது.
அதில், நகரின் முக்கிய சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து ஆய்வுகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
நிலம் கையகப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மின்வாரியக் கம்பங்களை இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
குறிப்பாக, ரங்கசாமி குளம், கீரை மண்டபம், மூங்கில் மண்டபம், ரெட்டை மண்டபம், ஜி.கே. மண்டபம், கம்மாள தெரு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல நாட்களாக நடைபெற்ற ஆய்வில், நகரின் முக்கிய சாலைகளில் காலையில் 6,245 வாகனங்களும், மாலையில் 13,100 வாகனங்களும் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், சாலைகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாலும், 11,111 சதுர மீட்டர் அளவுக்கு சாலையின் அகலம் குறைந்து, போக்குவரத்து பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட இடங்கள்
காஞ்சிபுரம் நகரில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பதற்காக, ஸ்ரீ நகரீஸ்வரர் கோவில் பகுதியில் 2.45 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, 200 கார்களை நிறுத்தும் வசதியுடன் 14 கோடி ரூபாய் செலவில் அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கேபிகே திருமண மண்டபம் அமைந்துள்ள 0.60 ஏக்கர் இடத்தில் 100 கார்களை நிறுத்தும் வகையில் 7 கோடி ரூபாய் செலவிலும், தர்கா பகுதியில் உள்ள 0.82 ஏக்கர் இடத்தில் 150 கார்களை நிறுத்தும் வகையில் 10.50 கோடி ரூபாய் செலவிலும் அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், காந்தி ரோடு பகுதியில் 1.50 ஏக்கர் நிலத்தில் 150 கார்களை நிறுத்தும் வசதியுடன் 10.50 கோடி ரூபாய் செலவில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கவும் கும்டா பரிந்துரைத்துள்ளது.
1. காஞ்சிபுரத்தில் தற்போது அதிகபட்சமாக 388 மீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. நிலம் கையகப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சாலைகளை விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டால், வாகன வரிசையின் நீளம் 145 முதல் 160 மீட்டராகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. நகரில் உள்ள விளக்கடி கோவில் தெரு மற்றும் ரயில்வே சாலையை மாநகராட்சி நிர்வாகத்திடமிருந்து நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்ற வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த இரு சாலைகளிலும் அதிக அளவில் வாகனங்கள் செல்வதால், இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
3. பழைய பேருந்து நிலையத்தில், பயணிகளின் தேவையைப் பொறுத்து, 300 கார்கள் நிறுத்தும் அளவிலான பெரிய அடுக்கு மாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
4. பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ள மின்வாரியப் பெட்டிகள் மற்றும் கம்பங்களை உயர்த்தியோ அல்லது பூமிக்கடியில் மாற்றியோ அமைக்க வேண்டும். பாதசாரிகளுக்கு குறைந்தபட்சம் 9 அடி அகலத்தில் நடைபாதை அமைக்க வேண்டும்.
5. நிலம் கையகப்படுத்துதல், கட்டுமானப் பணிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சிக்னல்கள் அமைத்தல், மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 80 கோடி ரூபாய் வரை செலவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கும்டா தனது அறிக்கையில் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
