HEALTH & NUTRITION

மருந்துகளை சட்டவிரோதமாக விற்றால் கடும் நடவடிக்கை! மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கை...

By ASWATHTHAMAN N • 2026-10-08 11:01 • 19 views   Share WhatsApp Share Facebook Share X
மருந்துகளை சட்டவிரோதமாக விற்றால் கடும் நடவடிக்கை! மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கை...

மருந்து என்பது ஒரு நோயைக் கண்டறிய, குணப்படுத்த, சிகிச்சை செய்ய அல்லது நோய் வராமல் தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சையளித்தல் என்பது மருத்துவத் துறையின் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது. மருந்துகள் பல்வேறு வழிகளில் வகைப்படுத்தப்படுகின்றன. மருந்துகளின் அளவைக் கட்டுப்படுத்துதல் என்பது ஒரு முக்கியமான வகைப்பாடாகும்.

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக மருந்துகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டுத் துறை இணை இயக்குநர் எஸ். குருபாரதி, மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அண்மைக் காலமாக ‘டாபென்டாடோல்’, ‘நைட்ராசிபாம்’ உள்ளிட்ட வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் மன அழுத்த நிவாரண மாத்திரைகள் தவறான முறையில் போதைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. இது மக்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

இதைத் தடுக்கும் பொருட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிலையங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டின் அடிப்படையில்தான் மருந்துகள் வழங்கப்படுகின்றனவா, அதுகுறித்த விற்பனைப் பதிவேடுகள் சரிவர பராமரிக்கப்படுகின்றனவா, இருப்புப் பட்டியல் சரியாக உள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், ஊசி மருந்துகளை செலுத்தப் பயன்படுத்தப்படும் ஊசி சிரிஞ்சுகள் விற்பனை குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். பதிவேட்டு தகவல்களுக்கும், உண்மையான இருப்புக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மருந்துகள் பெருமளவில் கடத்தப்படுவதோ அல்லது சட்டவிரோதக் கும்பலுக்கு விநியோகிக்கப்படுவதோ கண்டறியப்பட்டால், காவல்துறையினருடன் இணைந்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

##Latestupdate
ASWATHTHAMAN N 0 followers