தமிழ்நாட்டில் 18 வயது நிறைவடைந்தோருக்கு, முதல்முறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் முகாம்!!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய வாக்காளர்களுக்கு வாய்ப்பு
புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் வாய்ப்பளித்துள்ளது. இதன்படி, தகுதியுள்ள இளம் வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களின்படி, 01.10.2026 அன்று அல்லது அதற்கு முன்னர் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6 மற்றும் அதனுடன் கூடிய உறுதிமொழிப் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியானவர்கள் இணையவழியாகவோ அல்லது வாக்காளர் மையங்கள் வழியாக நேரிலோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்படாத வெற்றுப் படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) கிடைக்கும்.
தமிழகத்தில் அக். 10-இல் சிறப்பு முகாம்: 18 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வரும் அக். 10-ஆம் தேதி மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களும் தங்களது பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கல்லூரிகளில் செயல்படும் தேர்தல் கல்வியறிவுக் குழுக்களின் சேவைகள் மூலம் அக்டோபர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகள் நடைபெறுகின்றன.
மேலும், இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாவட்டங்களில் வரும் அக். 10-ஆம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.