ELECTION

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6 இடைத்தேர்தல் அறிவிப்பு- தேர்தல் ஆணையம்

By ASWATHTHAMAN N • 2026-09-08 05:23 • 2 views   Share WhatsApp Share Facebook Share X
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6 இடைத்தேர்தல் அறிவிப்பு- தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் இரண்டிற்கும் மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், சட்ட சிக்கல்கள் இல்லாத 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு - தேர்தல் ஆணையம்

வேட்புமனு தாக்கல் தொடக்கம் செப்டம்பர் 9
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் செப்டம்பர் 16
வேட்புமனுக்கள் மீது பரிசீலனை செப்டம்பர் 17
திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 19
வாக்குப்பதிவு நாள் அக்டோபர் 6
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9
தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் நாள் அக்டோபர் 11

தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் யார் போட்டி?
எஞ்சிய பெருந்துறை, கரூர், திருச்சி கிழக்கு, விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் சத்யபாமா போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல், ஒரு கூட்டத்தொடரில் கூட பங்கேற்காமல் உடனடியாக ராஜினாமா செய்துவிட்டனர். இவர்கள் தற்போது தவெகவில் இணைந்துள்ள நிலையில், வருகின்ற இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இடைத்தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு
இந்த சூழலில் வெற்றி, தோல்வி குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கட்சி, சின்னம், நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் வாக்களித்து வெற்றி பெற செய்த வேட்பாளர்கள் தங்கள் தீர்ப்பிற்கு மாறாக வேறு கட்சியில் சேர்ந்துவிட்டதை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். எம்.எல்.ஏக்கள் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிக்கு தாவியதை குதிரை பேரம் என்ற பின்னணியில் குற்றம்சாட்டப்படுகிறது. எனவே இவர்களை மீண்டும் நிற்கும் போது வெற்றி பெற வைப்பார்களா? என்ற கேள்வி எழுகிறது.

தவெகவிற்கு காத்திருக்கும் சவால்
தவெகவிற்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது என ஒருபுறம் கூறப்படுகிறது. மறுபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட விஷயங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதேசமயம் இடைத்தேர்தலில் எப்போதும் ஆளுங்கட்சிக்கு அதிக சாதகமான சூழல் இருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. தவெகவிற்கு போட்டியாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தும். இத்தகைய சூழலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.

தமிழகத்தை போல புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி, மேற்குவங்கத்தில் ரேஜிநகர், நந்திகிராம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தில் நாகோவன் மக்களவை தொகுதிக்கும் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ASWATHTHAMAN N 0 followers