DEVELOPMENT

பரந்துாரில் விமான நிலையம் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் பத்திரப்பதிவு தடை விலகாததால் விற்க முடியாம்ல் 20 கிராம மக்கள் பாதிப்பு!!

By ASWATHTHAMAN N • 2026-09-26 11:17 • 1 views   Share WhatsApp Share Facebook Share X
பரந்துாரில் விமான நிலையம் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் பத்திரப்பதிவு தடை விலகாததால்   விற்க முடியாம்ல்  20 கிராம மக்கள் பாதிப்பு!!

காஞ்சிபுரம்: பரந்துாரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், அதை சுற்றியுள்ள மற்ற நிலங்களின் பத்திரப்பதிவு தடை விலகாததால், அவற்றை விற்க முடியாமலும் வாங்க முடியாமலும், 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தவிர கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் நிலை குறித்தும் குழப்பம் அடைந்துள்ளனர்.

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்துாரில் அமைக்க, 2022ம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பரந்துார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை உள்ளடக்கி, 5,300 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இத்திட்ட பகுதியில் உள்ள நிலங்களை வாங்குவது, விற்பது உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், பரந்துாரில் விமான நிலையம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படுவதாக, ஆக., 24ல் சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.

காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இரு தாலுகாக்களிலும், பரந்துார் விமான நிலைய திட்டத்துக்காக, 5,300 ஏக்கர் நிலம் கணக்கில் எடுக்கப்பட்டது. இதில், 3,600 ஏக்கர் பட்டா நிலங்களாக இருந்தது. ஏற்கனவே 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பே, விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.

இதனால், விமான நிலைய திட்டத்துக்காக நிலங்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் நிலை குறித்து தெரியாமல், பரந்துார், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குழப்பமடைந்து உள்ளனர். பட்டா நிலம் வைத்திருப்போர், அவசர குடும்ப தேவைக்காக நிலத்தை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், நிலத்தை அடமானமாக வைத்து, வங்கியில் கடன் பெறுவதிலும் சிக்கல் உள்ளது. விமான நிலைய திட்டம் செயல்படுத்தப்படுவதற்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காலத்தில், நிலங்களின் விற்பனை மற்றும் பத்திரப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகள் இருந்ததை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், தற்போது அந்த திட்டமே கைவிடப்பட்டுவிட்டதால், அதே கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிப்பது ஏன் என, கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கிடையே, இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலத்தின் நிலையையும் தெளிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திட்டத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பத்திரப்பதிவு மற்றும் பட்டா மாற்றம் உள்ளிட்ட பிற கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை ஆகியவற்றிடம் இருந்து தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும் என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, மாவட்ட பதிவாளர் சுரேஷிடம் கேட்டபோது, ''பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான அரசாணை இன்னும் வெளியாகவில்லை. அரசாணை வந்த பின் தான் பதிவு செய்யலாம். வருவாய் துறை சார்பில், குறிப்பிட்ட இந்த சர்வே எண்கள் பதிவு செய்ய தடை விதித்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசாணை வந்தவுடன், அவர்களிடம் இருந்து எங்களுக்கு கடிதம் வழங்கப்படும். அதை தொடர்ந்து, பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

ASWATHTHAMAN N 0 followers