STORY

இராமானுஜர் பக்தரா நீங்க? வாழ்நாளில் ஒருமுறையாவது செல்லவேண்டிய 3 முக்கியக் கோயில்கள்!

By ASWATHTHAMAN N • 2026-07-16 08:21 • 2 views   Share WhatsApp Share Facebook Share X
இராமானுஜர் பக்தரா நீங்க? வாழ்நாளில் ஒருமுறையாவது செல்லவேண்டிய 3 முக்கியக் கோயில்கள்!

பாஷ்யகாரர், யதிராஜர் எனப் பலவாறு அழைக்கப் படுபவர் இராமானுஜர். வைணவ சமயத்தை உலகெங்கும் பரப்பியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் இவர், 1017 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். 120 ஆண்டுகள் வாழ்ந்து (1017 – 1137) வைணவத்தின் அருமை பெருமைகளை இந்தியா முழுவதும் பரப்பினார். பல்வேறு மடங்களை நிறுவினார். ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதி கோயில்களின் பூஜை முறைகளை முறைப்படுத்தினார். அரங்கன் திருவடிகளைத் துதித்து இறைவனடி சேர்ந்தார் இராமானுஜர்.
அவரின் சந்நிதி அநேக பெருமாள் ஆலயங்களில் இருக்கும். ஆனால் இராமானுஜரே மூன்று வடிவங்களில் அருளும் ஆலயங்களைத் தெரிந்துகொள்ளலாமா?.
தமர் உகந்த திருமேனி – திருநாராயணபுரம், மேல்கோட்டை
தானுகந்த திருமேனி - ஸ்ரீபெரும்புதூர்
தானான திருமேனி - ஸ்ரீரங்கம்
தமர் உகந்த திருமேனி:
கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் இராமானுஜர் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். இங்குள்ள ஆலயத்தில் அருளும் மூலவர் திருநாராயணர் மற்றும் உற்சவர் இருவருமே ஸ்ரீராமானுஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறப்புடையது.
இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த காலத்தில் சோழ மன்னன் ஒருவனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. அதனால் சீடர்களின் விருப்பப்படி அங்கிருந்து திருநாராயணபுரம் நோக்கி பயணப்பட்டார். வழியில் துளசிச்செடிகள் அடர்ந்த புதரில் புற்றுக்குள் திருமாலின் விக்கிரகம் தென்பட்டது. அதைக் கொண்டு வந்து மேல்கோட்டையில் ஆலயம் எழுப்பி, திருமாலைப் பிரதிஷ்டை செய்தார். அவர்தான் இப்போது அருளும் மூலவர்.
இங்கு உற்சவ மூர்த்தியாக அருளும் பெருமாளைச் செல்லபிள்ளை செல்வநாரயணப் பெருமாள் என்று அழைக்கிறார்கள். இந்த உற்சவத் திருமேனி டெல்லி பாதுஷாவின் பாதுகாப்பில் இருப்பதை அறிந்த இராமானுஜர், அங்கு சென்று மன்னரிடம் அந்த விக்ரகம் வேண்டும் எனக் கேட்டாராம். “வாராய் என் செல்லப்பிள்ளாய்” என்று அவர் விரும்பி அழைத்ததும், அந்தப்புரத்தில் இருந்த விக்ரகம், அசைந்து அசைந்து வந்து இராமானுஜரின் மடியில் அமர்ந்துகொண்டதாம். இந்த விக்ரகமே இப்போது இத்திருத்தலத்தில் உற்சவ மூர்த்தியாக இருக்கிறார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மேல்கோட்டையில் இராமானுஜர் வெகு காலம் தங்கியிருந்தார். அங்கிருந்து அவர் மீண்டும் ஸ்ரீரங்கம் கிளம்பியபோது, அவரின் பிரிவை நினைத்து சீடர்கள் வருந்தினார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று தன் எண்பதாவது வயதில், அவரே ஒரு சிற்பியைக் கொண்டு தன் சிலையைச் செதுக்கினார். தமர் (சீடர்கள்) உகந்த (விரும்பிய) வடிவில், கை கூப்பி விடைபெறும் கோலத்தில் அமைந்த இந்தச் சிலையில் தன் தெய்வீக சக்தியைப் பாய்ச்சி சீடர்களிடம் ஒப்படைத்தார்.
இந்தச் சிலையே இப்போதும் மேல்கோட்டை திருநாராயணபுரத்தில், ‘தமர் உகந்த திருமேனி” என்று வழிபடப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் தரிசனம்: அவதாரத் தலத்தில் ஆசீர்வதிக்கும் இராமானுஜர்:
தானுகந்த திருமேனி :
இராமானுஜர் அவதாரத் தலமான ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் தானுகந்த திருமேனியாக இராமானுஜர் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே அவரது சீடர்களால் இராமானுஜரின் திருவுருவம் அழகிய செப்புச் சிலையாக வடிக்கப்பட்டது. இந்த விக்ரகத்தைக் கண்ட இராமானுஜர் மிகவும் மகிழ்ந்து விக்ரகத்தைத் தழுவி, தன் சக்தியை அதனுள் செலுத்தினார். இராமானுஜர் உகந்து (விரும்பி) அணைத்ததால் இது தானுகந்த திருமேனி என்று அழைக்கப்படுகிறது.
இப்போதும் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் இராமானுஜரின் தானுகந்த திருமேனியைத் தரிசிக்கலாம். மழைக் காலம் மற்றும் குளிர் காலங்களில் இராமானுஜரின் தானுகந்த திருமேனிக்கு திருமஞ்சனம் செய்யும்போது வெந்நீரை உபயோகிக்கின்றனர்.
அதேபோல் இரவு நேரங்களில் குளிராமல் இருப்பதற்காக சால்வைகள், போர்வைகள் சாற்றப்படுகின்றன. கோடை காலங்களில் சூட்டைத் தணிக்க திருமேனியின் பின்புறம் சந்தனம் பூசப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
ஸ்ரீரங்கம் யாத்திரை: அரங்கன் மடியில் துயிலும் இராமானுஜர்:
தானான திருமேனி:
இராமானுஜர் தான் பிறந்த அதே பிங்கள வருடத்தில், 120ஆவது வயதில் பரமபத நிலையை அடைந்தார். திருவரங்கத்தில் மாசி மாதம் வளர்பிறை தசமியில், சனிக்கிழமையில் பத்மாசன நிலையில் அமர்ந்தபடி இறைவன் திருவடி அடைந்தார். தன் பக்தனை தன் அருகிலேயே வைத்துக் கொள்ள விரும்பிய திருமால், வசந்த மணடபத்தில் இராமானுஜருக்கு இடமளிக்கும்படி அசரீரியாகச் சொன்னார். மேலும் தான் உடுத்திக் களைந்த பீதகவாடையையும் (இறைவன் உடுத்திய பட்டுப் பீதாம்பரம்), சூடிக்களைந்த துளசி மாலையையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் இறுதி மரியாதையாக உத்தம நம்பி என்ற சீடர் மூலம் கொடுத்தனுப்பினார் அரங்கன்.
அதன்படி இராமானுஜரின் பூதவுடலுக்கு எண்ணெய் தடவி நீராட்டி, இறைவன் அளித்த ஆடையையும், மாலையையும் சாற்றி, ஸ்ரீரங்கம் ஆலயத்தில், முன்பு வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில், திருப்பள்ளிப் படுத்தப்பட்டது.
அதன்மேல் எழுப்பப்பட்டதுதான் இப்போதுள்ள உடையவர் சந்நிதி. இராமானுஜரின் உடலைப் பதப்படுத்தி சந்நிதியில் எழுந்தருளப் பண்ணியிருப்பதாகச் சொல்கிறார்கள். அவரின் திருமேனியில் தலைமுடி, கை நகம் போன்றவற்றை இப்போதும் நாம் தரிசிக்கலாம். ஒவ்வொரு வருடமும் சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் பச்சைக் கற்பூரம் மற்றும் மூலிகைகள் அவரது திருமேனியில் பூசப்படுகிறது. இந்தத் திருமேனி தானான திருமேனி என்று அழைக்கப்படுகிறது.
இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி உங்களின் ஆன்மீகச் சுற்றுலாவைத் திட்டமிடுவதன் மூலம், எவ்வித நேர விரயமுமின்றி ஆச்சார்யரின் மூன்று பிரத்யேக சந்நிதிகளையும் தரிசித்து, குடும்பப் பற்றுதல்களைத் தாண்டிய ஒரு நிலைத்த ஆன்மீகப் பேரின்பத்தையும் நிறைவையும் நீங்கள் அடையலாம்.

ASWATHTHAMAN N 0 followers