சோளிங்கா் மலைக்கோயிலுக்கு செல்ல ரோப்காா் பயணச்சீட்டுகள் இணையவழியில் மட்டுமே விநியோகம்...
ராணிப்பேட்டை: சோளிங்கர் யோக நரசிம்மர் மற்றும் லட்சுமி நரசிம்மர் மலைக்கோயிலுக்குச் செல்ல, கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ரோப்கார் பயணச்சீட்டுகள் இணையவழியில் மட்டுமே வழங்கப்படும் எனவும், இந்தக் காலகட்டத்தில் நேரடி பயணச்சீட்டு விநியோகம் ரத்து செய்யப்படுவதாகவும் சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சோளிங்கரில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, பெரியமலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்குச் சென்று திரும்புவதற்கான பயணச்சீட்டுக் கட்டணம் ரூ.100 என அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதத்தில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு ரோப்கார் பயணத்துக்கு இணையவழி முன்பதிவு செய்யும் நடைமுறையை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, காலை 6.30 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை மலைக்குச் சென்று திரும்புவதற்கான இருவழிப் பயணத்துக்கு இணையவழியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதில் ஒரு மணி நேரத்திற்கு 120 பக்தர்கள் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பிற்பகல் 3.15 மணி முதல் மாலை 5.30 மணி வரை ரோப்கார் கட்டடத்திலிருந்து மலை மேல்தளத்திற்குச் செல்வதற்கான ஒருவழிப் பயணத்துக்கு மட்டும் இணையவழியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒரு டிக்கெட்டில் அதிகபட்சமாக 4 நபர்கள் முன்பதிவு செய்யலாம்.
ரோப்கார் பயணத்துக்கு வரும் பக்தர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய தனிநபர் அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும். முன்பதிவு செய்த நேரத்துக்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே ரோப்கார் கட்டடத்துக்கு வந்துவிட வேண்டும்.
காலதாமதமாக வருபவர்கள் பயணத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். நேரடியாகப் பயணச்சீட்டு பெறும் வசதி ஒரு மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் அனைவரும் இணையவழியில் மட்டுமே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
