EDUCATION & EMPLOYMENT

தாட்கோ சிறப்பு பயிற்சி ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு பொன்னான வேலைவாய்ப்பு!!

By ASWATHTHAMAN N • 2026-10-07 09:46 • 3 views   Share WhatsApp Share Facebook Share X
தாட்கோ சிறப்பு பயிற்சி ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு பொன்னான வேலைவாய்ப்பு!!

தாட்கோ மூலம் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் பல்வேறு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், தாட்கோ மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கழகம் (ICT Academy) இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு, சென்னை மாவட்டத்தில் மென்பொருள், வலைதள வடிவமைப்பாளர் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர் பயிற்சியும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மென்பொருள், வலைதள வடிவமைப்பாளர், பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர், தரவுப் பகுப்பாய்வாளர், நுண்நிதி நிர்வாகம் மற்றும் காப்பீட்டு முகவர் பயிற்சியும், மதுரை மாவட்டத்தில் தரவுப் பகுப்பாய்வாளர், மென்பொருள் வடிவமைப்பாளர், நுண்நிதி நிர்வாகம் மற்றும் காப்பீட்டு முகவர் போன்ற பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

மென்பொருள் சார்ந்த பயிற்சி பெற இளங்கலை பொறியியல் மற்றும் பி.எஸ்.சி கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிதி சார்ந்த பயிற்சிகள் பெற இளங்கலை வணிகவியல் மற்றும் இளங்கலை வணிக நிர்வாகவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இப்பயிற்சியைப் பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியை முழுமையாக முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும்.

இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

##latestupdate
ASWATHTHAMAN N 0 followers