காஞ்சிபுரத்தில் நடக்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
"காஞ்சிபுரம் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், 25,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு."
தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் மாதந்தோறும் சிறிய அளவிலான முகாம்களும், ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் மற்றும் நாள்
அரசின் இந்த வழிகாட்டுதலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த ஏற்பாடு செய்துள்ளன. இம்முகாம் வருகிற 19.09.2026 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட பிரபல தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் நேரில் பங்கேற்று தங்களுக்கான மனிதவளத் தேவைகளுக்காக நேர்முகத் தேர்வை நடத்தவுள்ளன.
இதன் மூலம் 25,000-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களுக்குப் பணி நியமனம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் பங்கேற்கும் முறை
இம்முகாமில் 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம். 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ (ITI), டிப்ளமோ (Diploma) மற்றும் அனைத்து வகை பட்டப்படிப்பு முடித்த வேலைநாடுநர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
விருப்பமும் தகுதியும் உள்ள இளைஞர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்கள், சுயவிவரக் குறிப்பு (Resume) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களுடன் குறிப்பிட்ட நாளில் நேரில் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இம்முகாம் குறித்த கூடுதல் விவரங்களைப் பெற 044-27237124 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தெரிவித்துள்ளார்.