காதில் கேட்க கூடாத வார்த்தைகளை பேசுறீங்க.. மக்கள் என்ன நினைப்பாங்க.. சபாநாயகர் கோபம்...
சில திமுக, தவெக உறுப்பினர்கள் காதில் கேட்கக்கூடாத வார்த்தைகளை ஒருவொருக்கொருவர் பேசிக்கொள்வது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வேதனை தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏக்களுக்கு அட்வைஸ் செய்த அவர், "அவையில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது மக்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள். இனிமேல் இருப்பிடத்தை தாண்டி வருகிற உறுப்பினர் யாராக இருந்தாலும் நான் நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.
தவெக மற்றும் திமுக எம்எல்ஏக்களுக்கு இடையே இன்று சட்டசபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்திய சபநாயகர் அவையில் வேதனையுடன் தனது கருத்துகளை வெளியிட்டார். சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசியதாவது:-
யாரையும் வெளியேற்றும் நோக்கம் இல்லை
கடந்த 2 நாட்களாக சில திமுக, தவெக உறுப்பினர்கள் காதில் கேட்கக்கூடாத வார்த்தைகளை ஒருவொருக்கொருவர் பேசிக்கொள்வது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சட்டசபை நேரலையில் ஒளிபரப்பு ஆகிறது. அவையில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது மக்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்.
சட்டசபையின் மரபையும், கண்ணியத்தையும், கவுரவத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இரண்டு தரப்புக்கும் உண்டு. என்னை பொறுத்தவரைக்கும் யாரையும் இந்த அவையை விட்டு பேரவைத் தலைவர் அனுப்பினார் என்ற வருத்தத்திற்கு உரிய செயலுக்கு ஆட்பட்டு விடக்கூடாது என்ற கவலையில் சொல்கிறேன். யாரையும் வெளியேற்றும் நோக்கம் எனக்கு கிடையாது. அப்படி வெளியேற்றுவதை நியாயப்படுத்தி பேசும் நிலையை உருவாக்கக்கூடது என நினைப்பவன்.
அமைதி காக்க வேண்டும்
ஆக்கப்பூர்வமாக ஒரு பக்கம் அவை போய்க்கொண்டு இருந்தாலும் நம்மை பொறுத்தவரை நான் அன்போடு ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். ஆக்கப்பூர்வமான செய்திகளை முதலில் நீங்கள் பரிமாறிக்கொள்ளும் போது, ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை தவிர்த்துவிட்டு அதற்கு பதிலளிக்க கூடிய சங்கடமான சூழலை உருவாக்காமல் வரும் காலத்தில் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இனிமேல் நடவடிக்கை எடுப்பேன்
இனிமேல் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். இருப்பிடத்தை தாண்டி வருகிற உறுப்பினர் யாராக இருந்தாலும் நான் நடவடிக்கை எடுப்பேன். அதேபோல, உக்காந்தபடியே ஏசுகின்ற, நா கூசும் வார்த்தைகளை யார் பேசினாலும் அனுமதிக்க முடியாது. அதற்காக நீங்கள் வெகுண்டெழ வேண்டிய அவசியம் இல்லை. யார் என்ன பேசுகிறார்கள் என்பதை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆளும் கட்சிக்கு தான் அதிக பொறுப்பு உள்ளது. அந்தந்த கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று இருப்பவர்கள் கட்சியின் உறுப்பினர்களை எல்லை தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடைமையும் உள்ளது.