தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் பதவிக்காலம் 6 மாதங்கள் வரை நீட்டிப்பு.. மத்திய அரசு ஒப்புதல்
ஜூலை 16: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறையை முறையாக கடைப்பிடிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 8 ம் தேதி தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் புதிய தலைமை செயலாளராக சாய்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார்.
அதன்பிறகு சட்டசபை தேர்தல் முடிவடைந்தது. திமுகவை வீழ்த்தி தவெக தலைவர் விஜய் ஆட்சியை கைப்பற்றி முதல்வரானார். பொதுவாக புதிய ஆட்சி அமைந்த பிறகு தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட தலைமை செயலாளர் உள்பட பிற துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். ஆனால் முதல்வர் விஜய், தலைமை செயலாளர் சாய்குமாரை மாற்றம் செய்யவில்லை. அவர் தொடர்ந்து தலைமை செயலாளராகவே செயல்பட்டு வருகிறார்.
இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அதுமட்டுமின்றி தலைமை செயலாளர் சாய்குமார் வரும் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் தான் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. இதுவும் அனைவரின் புருவங்களையும் உயர்த்த செய்தது.
அதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகள் முதல்வர் விஜய்யின் இந்த முடிவை எதிர்த்தனர். சாய்குமாரின் பதவிக்காலத்தை நீட்டிப்பது என்பது பிற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வை பாதிக்கும். இதனால் சாய்குமாரின் பதவி நீட்டிப்பு நடவடிக்கையை தமிழக அரசு கைவிட்டு புதிய தலைமை செயலாளரை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறினர். ஆனால் முதல்வர் விஜய் அதற்கு செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் தான் சாய்குமாரின் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்ய அனுமதி கோரிய தமிழக அரசுக்கு, மத்திய அரசு சார்பில் ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி சாய்குமாரின் பதவிக்காலம் செப்டம்பர் 1ம் தேதி முதல் 2027 பிப்ரவரி மாதம் 28 ம் தேதி வரை 6 மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சாய்குமார் 2027 பிப்ரவரி மாதம் 28 ம் தேதி வரை தமிழகத்தின் தலைமை செயலாளராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தலைமை செயலாளராக பதவி நீட்டிப்பு பெற்றுள்ள சாய்குமார் 1990ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். மதுரை, தர்மபுரி, விருதுநகர் மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவர், நகராட்சி நிர்வாக ஆணையர், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை பல ஆண்டுகளாக வகித்துள்ளார்.