TECHNOLOGY

திருத்தணி மலைக்கோவிலுக்கு வாகனங்கள் சென்று வர கட்டணம் செலுத்த புதிய வசதி அறிமுகம்!

By ASWATHTHAMAN N • 2026-09-04 06:04 • 6 views   Share WhatsApp Share Facebook Share X
திருத்தணி மலைக்கோவிலுக்கு வாகனங்கள் சென்று வர கட்டணம் செலுத்த புதிய வசதி அறிமுகம்!

ஆட்டோமேட்டிக் பூம் பேரியர் என்பது வாகனப் போக்குவரத்தை முறைப்படுத்தவும், பாதுகாப்புத் திறனை அதிகரிக்கவும் நுழைவாயில்களில் பயன்படுத்தப்படும் ஒரு தானியங்கி பாதுகாப்புத் தடுப்பு அமைப்பாகும். இது பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் தொழிற்சாலைகளின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளில் நிறுவப்படுகிறது

திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் சென்று வரும் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்கு, 'ஆட்டோமேட்டிக் பூம் பேரியர்' வசதியை, கோவில் நிர்வாகம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு இருசக்கர வாகனம், கார், வேன், ஆட்டோ, லாரி மற்றும் பேருந்துகள் ஆகியவற்றின் மூலம், பக்தர்கள் சென்று வருகின்றனர்.

மலைப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கு, டூ - வீலருக்கு 10 ரூபாய், கார், வேன், டெம்போ போன்றவற்றுக்கு 60 ரூபாய், பேருந்து, லாரிகளுக்கு 100 ரூபாயை, கோவில் நிர்வாகம் கட்டணமாக வசூலித்து வருகிறது.

இதற்காக, வாகன ஓட்டிகள் பணம் கொடுத்து நுழைவு சீட்டு வாங்க, அதிக நேரம் ஏற்படுகிறது. அதனால், நீண்ட வரிசையில் மலைப்பாதையில் காத்திருக்கின்றனர். இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதை தடுக்கும் வகையில், கோவில் நிர்வாகம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இணைந்து, மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு, 'ஆட்டோமெட்டிக் பூம் பேரியர்' மூலம் வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி சார்பில், 33.40 லட்சம் ரூபாய் மதிப்பில் இத்திட்டத்தின் தொடக்க விழா, நேற்று திருத்தணி தனியார் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.

இதில், கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, பாரத ஸ்டேட் வங்கியின் சேர்மன் சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டி ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், 'ஆட்டோடமெடிக் பூம் பேரியர்' என்ற புதிய செயலி மூலம், மலைப்பாதை நுழைவாயிலில் வாகனங்கள் சென்றால், அதற்கான கட்டணம் வங்கி கணக்கிற்கு நேரடியாக சென்றுவிடும்.

இதனால், வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம். மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் குறையும். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு, இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ASWATHTHAMAN N 0 followers