June 30, 2026

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான சீஷெல்ஸிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

ஜூன் 29: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இப்போது சீஷெல்ஸ் (Seychelles) நாட்டிற்கு அதிகாரப்பூர்வமாகச் சென்றுள்ளார். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த பயணத்தின் போது பிரதமர் மோடிக்கு “கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்” (Guardian of the Blue Horizon – Presidential Distinction) என்ற விருது வழங்கப்பட்டது.
விருது
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், சிறிய தீவு நாடுகளின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட பிரதமர் நரேந்திர மோடியைக் கவுரவிக்கும் வகையில், சீஷெல்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான இந்த “கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்” வழங்கப்பட்டுள்ளது. பிற வளரும் நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் ஆதரவை உலக அரங்கில் உறுதிப்படுத்தும் வகையில் இந்த அமைந்துள்ளது.
புவிசார் அரசியல் ரீதியாகப் பார்க்கும்போது சீஷெல்ஸ் இந்தியப் பெருங்கடல் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதைகளின் மிக அருகில் அமைந்துள்ள இந்தத் தீவு நாடு, கடல்வழிப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பிராந்தியப் பாதுகாப்பைப் பேணுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் ‘சாகர்’ (SAGAR – Security and Growth for All in the Region) கொள்கையின் கீழ், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட சீஷெல்ஸ் ஒரு தவிர்க்க முடியாத பார்ட்னராக விளங்குகிறது.
சிறப்பு வழிபாடு
இப்பகுதியில் அதிகரித்து வரும் பிற நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளவும், கடல்சார் கண்காணிப்பைப் பலப்படுத்தவும் இந்தியாவிற்கு சீஷெல்ஸ் நாட்டின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.. அப்படிப்பட்ட நாட்டிற்கே பிரதமர் மோடி சென்றுள்ளார். தனது அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, சீஷெல்ஸ் நாட்டில் உள்ள புகழ்பெற்ற நவசக்தி விநாயகர் ஆலயத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். சீஷெல்ஸ் நாட்டின் தலைநகரான விக்டோரியாவில் அமைந்துள்ள இந்த கோயில், அந்நாட்டில் குடியேறிய இந்துக்களால் கட்டப்பட்ட முதல் மற்றும் ஒரே இந்து கோயிலாகும்.
1992ல் கட்டப்பட்ட இந்த ஆலயம், அங்கு வாழும் தமிழர்கள் மற்றும் பிற இந்திய வம்சாவளியினருக்கும் ஒரு முக்கிய ஆன்மிக மற்றும் கலாச்சார மையமாகத் திகழ்கிறது. பிரதமர் மோடியின் கோயில் பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது
தமிழர்கள்
சீஷெல்ஸ் நாட்டில் தமிழ் மக்கள் குடியேறிய வரலாறு பல நூற்றாண்டுகள் பழமையானது ஆகும். பிரெஞ்சு ஆட்சியாளர்கள் இப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, அதாவது 1770ஆம் ஆண்டில், விவசாயம் மற்றும் வர்த்தகத்திற்காகப் பாண்டிச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் இருந்து தமிழ் தொழிலாளர்களை முதன்முதலில் இந்தத் தீவுக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் அங்குள்ள கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, தங்களின் அயராத உழைப்பால் அத்தீவை வளப்படுத்தினர். அதைத் தொடர்ந்து பிரிட்டன் ஆட்சியின் போதும் தமிழர்கள் வணிகர்களாகவும், அரசுப் பணியாளர்களாகவும் அங்கே சென்று குடியேறி, நாட்டின் முக்கியமான வணிகக் கட்டமைப்புகளை உருவாக்கினர். இன்று சீஷெல்ஸ் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்திய வம்சாவளியினர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின்றனர். அதில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொண்டாட்டம்
தற்போது அங்குள்ள தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 10,000ஐ நெருங்குவதாக மதிப்பிடப்படுகிறது. இவர்கள் அங்குள்ள உள்ளூர் கிரியோல் கலாச்சாரத்தோடு தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டு வாழ்ந்தாலும், தங்களின் தனித்துவமான தமிழ் அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் பாதுகாத்து வருகின்றனர். தைப்பூசம், பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் அங்கு அரசு அங்கீகாரத்துடன் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன

Written by

ASWATHTHAMAN N

District Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

INDIAN PRESS UNION

Indian Press Union (IPU) A National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved IPU MEDIA ASSOCIATION