ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு போக்குவதற்கு 14 குடிநீர் வளர்ச்சிப் பணிகளுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா நிர்வாக அனுமதி அளித்துள்ளார்...
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை
ஊராட்சிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக, 14 குடிநீர் மேம்பாட்டுப் பணிகளுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா நிர்வாக அனுமதி அளித்துள்ளார்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்தூர், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் 274 ஊராட்சிகள் உள்ளன. இதுதவிர, பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளும் உள்ளன.
இந்த உள்ளாட்சிப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் பாலாறு, செய்யாறு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோடை மழை குறைந்ததுடன், தென்மேற்கு பருவமழை பெய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
குறிப்பாக, பாலாறு, வேகவதி ஆறு மற்றும் செய்யாறு ஆகிய ஆற்றுப்படுகைகளை ஒட்டியுள்ள கிராமங்களில் ஆழ்துளைக் கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
உதாரணமாக, வாலாஜாபாத் பேரூராட்சியில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனம்பாக்கம், ஆசூர், வில்லிவலம், சோமங்கலம், வயலூர், நீர்குன்றம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக, வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகளிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மற்றும் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கலெக்டரிடம் நிர்வாக அனுமதி கோரப்பட்டது.
முதற்கட்டமாக, குன்றத்தூர், காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஆகிய ஒன்றியங்களில் 14 குடிநீர் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.1.13 கோடி செலவில் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் ஊராட்சிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.