ECONOMY

சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்.

By ASWATHTHAMAN N • 2026-10-28 11:22 • 3 views   Share WhatsApp Share Facebook Share X
சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்.

எதிர்வரும் ஆண்டுகளில் சீனா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு பொருள்கள், சேவைகளை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா-நெதர்லாந்து இடையிலான பொருளாதாரம், முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், பியூஷ் கோயல் தலைமையிலான இந்தியக் குழு நெதர்லாந்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டது.

இதையொட்டி, ஹேக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய கோயல், இந்தியா-சீனா வர்த்தக உறவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ஒவ்வொரு நாட்டுடனும் சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்தை இந்தியா ஊக்குவிப்பதாகக் குறிப்பிட்டார்.

சீனா, இந்தியாவுக்குத் தேவையான முக்கிய மூலப்பொருள்கள் மற்றும் இடைநிலைப் பொருள்களை விநியோகித்து வருவதாகக் கூறிய அவர், குறிப்பிட்ட பொருள்களின் விலை நிர்ணயம் அல்லது வர்த்தக நடைமுறைகளில் நியாயமற்ற சூழல் இருப்பது கண்டறியப்பட்டால், அதனை எதிர்கொள்ள உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றார்.

திறந்த மற்றும் வெளிப்படையான வர்த்தக விதிமுறைகளில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், நாட்டின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விநியோக நாடுகளை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், இந்தியப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு வெளிநாடுகளில் பரஸ்பர அடிப்படையில் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறிய கோயல், வரும் ஆண்டுகளில் சீனா மற்றும் ஆசியான் பிராந்தியத்திற்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானில் புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியத்நாம் ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்து கவலைக்குரியதாக உள்ளது. 2025-26 நிதியாண்டில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 19.47 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. அதே காலகட்டத்தில், சீனாவிலிருந்து இந்தியா மேற்கொண்ட இறக்குமதி சுமார் 131.62 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

ஏற்றுமதி அதிகரித்திருந்தாலும், இறக்குமதி அதைவிட அதிகமாக இருப்பதால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகச் சமநிலையின்மை தொடர்ந்து முக்கிய பொருளாதாரப் பிரச்சினையாக நீடிக்கிறது.

##Latestupdate
ASWATHTHAMAN N 0 followers