AVIATION

தூத்துக்குடியின் கனவு நிறைவேறுகிறது: கப்பல் கட்டும் தளத்தை உறுதி செய்தது ஹெச்டி ஹூண்டாய்..!!

By ASWATHTHAMAN N • 2026-09-16 09:37 • 6 views   Share WhatsApp Share Facebook Share X
தூத்துக்குடியின் கனவு நிறைவேறுகிறது: கப்பல் கட்டும் தளத்தை உறுதி செய்தது ஹெச்டி ஹூண்டாய்..!!

தூத்துக்குடியில் HD Hyundai கப்பல் கட்டும் தளம்: விரிவான திட்டப் பணிகள் தொடக்கம்

தமிழ்நாட்டில் முக்கிய தொழில் உற்பத்தி மையமாக தூத்துக்குடி மாவட்டம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக கப்பல் சார்ந்த தொழில்களை தொடங்க நிறுவனங்கள் தூத்துக்குடி நோக்கி கவனம் செலுத்தி வருகின்றன.

தென்கொரியாவை சேர்ந்த முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான HD Hyundai நிறுவனம், தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சி. துறைமுகம் அருகே கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக தமிழக அரசுடன் கடந்த 2025ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த திட்டத்தில் சுமார் ரூ.18,000 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் முயற்சிகளின் பின்னணியில், HD Hyundai நிறுவனம் இந்தியாவில் தனது கப்பல் கட்டும் தளத்தை அமைப்பதற்கான திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

தூத்துக்குடியில் ஆய்வுப் பணிகள்

இந்நிலையில், இந்த திட்டம் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தூத்துக்குடியில் திட்டத்திற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் மற்றும் விரிவான திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக தொழில் துறை தெரிவித்துள்ளது.

HD Hyundai நிறுவனத்தின் மூத்த குழுவினர் தூத்துக்குடிக்கு சென்று துறைமுகப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சன்ஜுன் ஹாங் தலைமையிலான குழுவினர் கடந்த 1ஆம் தேதி முதல் சுமார் ஒரு வார காலம் தூத்துக்குடியில் முகாமிட்டு திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சருடன் ஆலோசனை

ஆய்வுக்குப் பின்னர், அக்குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளை சந்தித்து திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையின்போது, தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க HD Hyundai நிறுவனம் உறுதியளித்துள்ளதாக தொழில் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான திட்டப் பணிகள் முன்னேற்றம்

இதுகுறித்து தொழில் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்திற்கான பணிகள் ஆரம்ப கட்டத்தை எட்டியுள்ளதாகவும், ஆரம்பகட்ட ஆய்வுகள் மற்றும் விரிவான திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

HD Hyundai நிறுவனம் தனது திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், தூத்துக்குடி எதிர்காலத்தில் இந்தியாவின் முக்கிய கப்பல் கட்டும் மையங்களில் ஒன்றாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சி

இந்த திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வந்தால், நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் கப்பல் கட்டுமானம் மட்டுமின்றி அதனைச் சார்ந்த உதிரிபாகங்கள், சேவைகள், தொழில்நுட்பப் பணிகள் மற்றும் பிற துணைத் தொழில்களும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டத்தின் அடுத்த கட்டங்கள், விரிவான திட்ட அறிக்கை மற்றும் தேவையான அரசு அனுமதிகள் உள்ளிட்ட செயல்முறைகள் முன்னேறிய பின்னரே அதன் முழுமையான முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு தாக்கம் தெளிவாகும்.

ASWATHTHAMAN N 0 followers