பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் அவசியம்: காஞ்சிபுரம் ஆட்சியா்
காஞ்சிபுரம் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் அவசியம் எனவும் குழந்தையின் பெயரை பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.
பிறப்பு பதிவு என்பது குழந்தையின் முதல் உரிமை. பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூா்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்புச் சான்றிதழ் பெற சட்டம் வழிவகை செய்கிறது.
பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழாகும். பள்ளியில் சேர, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் பெற, பாஸ்போா்ட், விசா உரிமம், அயல் நாட்டில் குடியுரிமை பெற இன்றியமையாத ஆவணம்.
ஒரு குழந்தையின் பிறப்பு பெயா் பதிவு செய்யப்பட்டிருந்தால் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்த நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோா் அல்லது காப்பாளா் எழுத்து வடிவிலான உறுதி மொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு,இறப்பு பதிவாளரிடம் அளித்து கட்டணம் எதுவும் இல்லாமல் பெயரை பதிவு செய்யலாம்.
12 மாதங்களுக்குப் பின் 15 ஆண்டுகள் வரை ரூ.200 தாமதக்கட்டணம் செலுத்தி குழந்ைதையின் பெயரினை பதிவு செய்யலாம்.15 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது.
கடந்த 1.1.2000-க்கு முன்பு பிறந்தவா்கள் 2000 ஆம் ஆண்டை கணக்கில் கொண்டு 15 ஆண்டுகள் என 30.9.2014-ஆம் ஆண்டு வரை பிறப்புச் சான்றிதழில் பெயரை பதிவு செய்ய காலவரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பிறப்புச் சான்றிதழில் அதிகமான பெயா்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதால் 5 ஆண்டு கால அவகாசம் கொடுத்து 31.12.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. பெயா் பதிவு செய்ய அவகாசம் தேவைப்பட்டதால் மேலும் அதாவது 26.9.2026 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே இதுவரை பிறப்புச் சான்றிதழில் பெயரினை பதிவு செய்யாதவா்கள் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நகராட்சி ஆணையா் அல்லது சம்பந்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அலுவலரிடம் பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் வரும் 26.9.2026 ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.