கழிவுநீர் கலந்த மழைநீர் ரங்கசாமி குளத்திற்குள் செல்வதால் அதிகாரிகள் ஆய்வு செய்து பணியை தடையின்றி மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ரங்கசாமி குளம். நகரில் சிறந்த நீா்வள ஆதாரமாகவும், பொதுமக்கள் நடைப்பயிற்சியும் செய்து வந்த இக்குளமானது புதா்கள், காடுகள் மண்டியிருந்தது.
காஞ்சிபுரம், காந்தி சாலை, விளக்கடி கோவில் தெருவிற்கு இடையே உள்ள ரங்கசாமி குளம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அஷ்டபுஜ பெருமாள் கோவில் பராமரிப்பில் உள்ளது.
அப்பகுதி நிலத்தடி நீராதாரமாக விளங்கி வரும் இக்குளம், 2018ம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுலா துறை சார்பில், 'பிரசாத்' திட்டத்தில், 25.39 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி நிர்வாகம் மூலம் ரங்கசாமி குளம் சீரமைக்கப்பட்டது.
ஆனால், குளத்திற்கு மழைநீர் வரும் அனைத்து கால்வாய்களையும் முறையாக சீரமைக்கவில்லை. இதனால், ஆண்டுதோறும் பருவமழையின்போது கூட குளம் முழுமையாக நிரம்பவில்லை.
இந்நிலையில், மழைநீர் கால்வாயில் முறைகேடாக கழிவுநீரை விடுவதால், மழைநீருடன் வரும் கழிவுநீர் கலந்ததால் குளத்து நீர் மாசடைந்து, செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் இருந்தது.
எனவே, இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், காந்தி ஜெயந்தியையொட்டி பசுமை இந்தியா, சர்வம், காஞ்சி 360 உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்பினர் ஒன்றிணைந்து, ரங்கசாமி குளத்தை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இரு கட்டங்களாக நடந்த துாய்மை பணியில், குளக்கரையில் இருந்த செடிகள் அகற்றப்பட்டன. மூன்றாவது கட்டமாக, பொக்லைன் இயந்திரம் மூலம் குளம் துார்வாரும் பணி நடந்தது.
நேற்று மாலை, காஞ்சிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கால்வாய்கள் வழியாக வந்த மழைநீருடன், சில பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கலந்து ரங்கசாமிகுளத்திற்கு வந்தது. இதனால், குளத்தில் தேங்கிய மழைநீரில், கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியது.
ஏற்கனவே துார்வாரும் பணி நடைபெற்று வரும் நிலையில், கழிவுநீர் கலந்த மழைநீர் குளத்திற்குள் செல்வதால், குளத்து நீர் பாதிக்கப்படுவதுடன், துார்வாரும் பணியின் நோக்கமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கழிவுநீரில் உள்ள திடக்கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை மழைநீருடன் அடித்து வரப்பட்டு குளத்தில் தேங்கும் வாய்ப்புள்ளது.
எனவே, ரங்கசாமி குளத்திற்குள் கழிவுநீர் செல்லும் வழித்தடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். கால்வாய்களை சீரமைத்து, குளத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி, துார்வாரும் பணியை தடையின்றி மேற்கொள்ள வேண்டும்.