முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டை தயாா்: காஞ்சிபுரம் ஆட்சியா்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள 28,240 மணல் மூட்டைகள் தயார்
காஞ்சிபுரம்: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கவும், அவசரகால மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தி. சினேகா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் தி. சினேகா முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் 381 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் 378 ஏரிகளும் உள்ளன. இவற்றில் நான்கு ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. மாவட்டத்தில் இதுவரை 189.6 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய 72 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதி மக்களைப் பாதுகாப்பதற்காக 62 நிவாரண முகாம்களும், கூடுதலாக 43 மாற்று முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் தங்குவோருக்கு உணவு வழங்குவதற்காக 23 சமுதாய உணவுக் கூடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளைக் கண்காணிக்க 45 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீர்வளத் துறை சார்பில் 28,240 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 6,004 மின்கம்பங்கள் மற்றும் 110 மின்மாற்றிகளும் தயார் நிலையில் உள்ளன.
மழை மற்றும் வெள்ள மீட்புப் பணிகளுக்காக எட்டு ரப்பர் படகுகள், 77 ஜேசிபி இயந்திரங்கள், 60 மின்சார ஜெனரேட்டர்கள், 98 நீர் இறைக்கும் பம்புகள், 4,490 சவுக்கு மரக் கம்பங்கள், 33 ஆம்புலன்ஸ்கள், 256 உயிர்காப்பு மிதவைகள், 256 லைஃப் ஜாக்கெட்டுகள் மற்றும் 151 டார்ச் லைட்டுகள் உள்ளிட்ட உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நெல் மூட்டைகள் மழைநீரால் பாதிக்கப்படாமல் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்குவதற்காகப் போதுமான இருப்பும் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக 36 பயிற்சி பெற்ற காவல்துறையினர், 97 தீயணைப்புப் பணியாளர்கள், 500 தன்னார்வலர்கள், 974 முதலுதவிப் பணியாளர்கள், 32 பாம்பு பிடிப்பவர்கள் மற்றும் 27 நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
பொதுமக்கள் அவசர உதவி மற்றும் புகார்களுக்காக மாவட்ட பேரிடர் மேலாண்மைக் கட்டுப்பாட்டு அறையின் 044-27237107 என்ற தொலைபேசி எண்ணிலும், 7092300019 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
பருவமழைக் காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்காக அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
