AGRICULTURE

பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் விளை நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல், தரிசாகும் அபாயம்!

By ASWATHTHAMAN N • 2026-11-10 05:02 • 42 views   Share WhatsApp Share Facebook Share X
பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள்  விளை நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல்,  தரிசாகும் அபாயம்!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 35,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன நீர் பற்றாக்குறை

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய ஏரிகளில் போதிய அளவு நீர் இல்லாததால், பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தாமல், உத்திரமேரூர், மதுராந்தகம் உள்ளிட்ட 16 முக்கிய ஏரிகளில் நீர்மட்டம் குறைவாக இருப்பதால், சுமார் 35,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தேவையான பாசன நீர் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவு கிடைக்காததால் பெரும்பாலான ஏரிகளுக்கு போதிய நீர்வரத்து ஏற்படவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு ஏரிகளும் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தாமல், உத்திரமேரூர், மதுராந்தகம் உள்ளிட்ட முக்கிய ஏரிகளை நம்பி இரு மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

தென்னேரி மற்றும் உத்திரமேரூர் ஏரிகளில் தலா 1 டி.எம்.சி. வரை நீரை சேமிக்க முடியும். ஆனால், உத்திரமேரூர், மணிமங்கலம், காயார், மானாமதி, சிறுதாவூர், தையூர் உள்ளிட்ட பல ஏரிகளில் நீர்வரத்து குறைவாக இருப்பதால் போதுமான நீர் இருப்பு இல்லை.

பொதுவாக வடகிழக்கு பருவமழையின் நீர்வரத்தை அடிப்படையாகக் கொண்டே விவசாயிகள் சம்பா பருவ சாகுபடி பணிகளை மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு ஏரிகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் சாகுபடி பணிகளை முழுமையாக மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைப்பொழிவு குறைவால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படக்கூடும் என்பதால், விவசாயிகளின் கவலை மேலும் அதிகரித்துள்ளது.

##Latestupdate
ASWATHTHAMAN N 0 followers