திருத்தணி முருகன் கோயில் கோபுரத்திலிருந்த பரிவார மூர்த்தி சிலைகள் விழுந்து 4 பக்தர்கள் படுகாயம்.
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கோபுரத்தில் இருந்த பழமையான பரிவார மூர்த்தி சிலைகளின் பகுதிகள் திடீரென இடிந்து பக்தர்கள் மீது விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் காலாண்டு விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
இதனால் மலைக்கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, பொதுதரிசனப் பாதையில் பக்தர்கள் மண்டபத்தை கடந்து வசந்த மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள பழமையான சுண்ணாம்பு கட்டுமான கோபுரப் பகுதியில் இருந்த பரிவார மூர்த்தி சிலைகளின் பகுதிகள் திடீரென இடிந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அந்த பகுதியில் அதிகளவில் பக்தர்கள் இருந்ததால், சிலைகள் மற்றும் கட்டடப் பகுதிகள் பக்தர்கள் மீது விழுந்தன. இதில், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி (60), ஜெயா (65), ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த சரிதா (40) மற்றும் அவரது மகன் மணிகண்டன் (23) ஆகிய 4 பேர் காயமடைந்தனர். மேலும், இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனையில் முதலுதவி பெற்றுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த பக்தர்கள் மற்றும் அந்த பகுதியில் இருந்த முருக பக்தர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு, கூட்டத்திலிருந்து வெளியே கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு காயமடைந்த 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகம் உதவவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு
சம்பவம் குறித்து காயமடைந்தவர்களுக்கு உதவிய பக்தர்கள் கூறுகையில், சிலைகள் விழுந்தவுடன் காயமடைந்தவர்களை மீட்க கோயில் ஊழியர்கள் உடனடியாக உதவவில்லை என்றும், பக்தர்கள் செல்லும் பாதையில் இருந்த இரும்பு தடுப்புகளைத் திறந்து காயமடைந்தவர்களை வெளியே கொண்டு வருவதற்கும் போதிய உதவி செய்யப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
மேலும், சம்பவம் நடைபெற்ற உடனேயே காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும், தாங்களே 108 ஆம்புலன்ஸை வரவழைத்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.