குரூப் 2, 2ஏ பணிகளுக்கான சான்றிதழ் கலந்தாய்வு தேதி அறிவிப்பு
சென்னை: குரூப் 2, 2ஏ பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் கலந்தாய்வு செப்.16- ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளில் 80 காலிப் பணியிடங்கள், குரூப் 2ஏ பணிகளில் 748 காலிப் பணியிடங்கள் என மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெற்றது. அதில் குரூப் 2 பணிகளில் 1,126 பேரும், குரூப் 2ஏ பணிகளில் 9,457 பேரும் தேர்ச்சிப் பெற்று முதன்மைத் தேர்வை எழுதுவதற்கு தகுதிப் பெற்றனர்.
அதைத் தொடர்ந்து, மார்ச் 15-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 38 தேர்வு மையங்களில் குரூப் 2 முதன்மைத் தேர்வை 525 பேரும், குரூப் 2ஏ முதன்மைத் தேர்வை 8,652 பேரும் எழுதியிருந்தனர். இந்நிலையில், முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜூன் 29-ஆம் தேதி வெளியாகின. இதையடுத்து, தற்போது சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-1 (தொகுதி II பணிகள்) (அறிவிக்கை எண்.11/2025, நாள் 15/07/2025 மற்றும் அதன் பிற்சேர்க்கைகள்) தேர்வின் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த ஜூன் 29-ஆம் தேதி அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
மேற்குறிப்பிட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு செப்.16-ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண்.3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை 600003- ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in- ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவுச் செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்து கொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது" என அதில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.