ஜூன் 29: காஞ்சிபுரம் ஓரிக்கை துணை மின் நிலையத்திற்கு, 110 கிலோ வோல்ட் மாற்று மின் வழித்தடம் வசதி இல்லாததால், வணிக நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் சீரான மின்சாரம் வழங்க முடியவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், உயரழுத்த மின் பிரச்னையை சரி செய்ய முடியாமல், மின் வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த, ஆரியபெரும்பாக்கம் கிராமத்தில், 230 கிலோ வோல்ட் திறன் உடைய துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, 230 கிலோ வோல்ட் திறன் கொண்ட மின் மாற்றி உள்ளது.
இந்த மின் மாற்றில் இருந்து, 110 கிலோ வோல்ட் திறன் கொண்ட மின் மாற்றிக்கு கடத்தும் திறனுடைய மின் இணைப்பு உள்ளது. அதேபோல, 33 கிலோ வோல்ட் திறன் கொண்ட மின் மாற்றிக்கு எடுத்து செல்லும் மின் இணைப்பும் உள்ளது.
இந்த துணை மின் நிலையத்தில் இருந்து, தாமல், பஞ்சுப்பேட்டை உள்ளிட்ட துணை மின் நிலையங்களுக்கு மின் விநியோகம் வழங்கப் படுகிறது.
அதேபோல, சுங்குவார்சத்திரம் 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையத்தில் இருந்து, 110 கிலோ வோல்ட் திறன் மின்சாரத்தை பிரித்து, காஞ்சிபுரம் ஓரிக்கை, நீர்வள்ளூர், சிங்காடிவாக்கம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்படுகிறது.
இருப்பினும், சுங்குவார்சத்திரம் துணை மின் நிலையத்தில், உயரழுத்த மின் பிரச்னை இருப்பதால், வாலாஜாபாத் மற்றும் ஓரிக்கை பகுதிகளில் மின் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, கோடைக்காலத்தில் காஞ்சிபுரம் ஓரிக்கை, காந்தி சாலை, பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘ஏசி’ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பால், அடிக்கடி மின் தடை ஏற்பட நேரிடுகிறது. இதனால், தொழில் வளர்ச்சி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப் படுகின்றனர்.