திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா: காவடிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்...
ஆறு படைவீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காவடிகள் ஏந்தி மலைக்கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்
திருத்தணி: முருகப்பெருமானின் 5ம் படை வீடாக சிறப்புபெற்ற திருத்தணி முருகன் கோயிலில் இன்று ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. முருகருக்கு காவடிகள் செலுத்த தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக, பாண்டிச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே திருத்தணி முருகன் கோயிலில் குவிந்து வருகின்றனர். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, அலகு குத்தி 365 படிகள் ஏறி மலைகோயில் வந்தனர். 3 மணி நேரம் பொது வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், முருகப்பெருமானுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
24 மணி நேரமும் தரிசனத்துக்கு அனுமதி
தெப்ப திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி 5 நாள் நடைபெறும் நிலையில், இன்று பக்தர்கள் குவிந்தனர். தடையின்றி சாமி தரிசனம் செய்ய வசதியாக சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, பொதுவெளியில் பக்தர்கள் காவடிகள் செலுத்தி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. விடிய, விடிய சாமி தரிசனம் செய்ய கோயில் நடை திறந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று மாலை மலை அடிவாரத்தில் சரவண பொய்கை திருக்குளத்தில் முதல் நாள் தெப்ப திருவிழா நடைபெறுகிறது.
திருப்போரூர்
சென்னை அருகே திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் வந்து, தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இன்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்தனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஆடிக் கிருத்திகை தினத்தை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றி, முருகப்பெருமானை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இதேபோல், பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலிலும், சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களிலும் இன்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.