இந்தியா விரைவில் மூன்றாவது இடத்தை நோக்கி முன்னேறும் என்றும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற 22-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.
அப்போது, பட்டம் பெறுவது மட்டுமே கல்வியின் இறுதி இலக்காக இருக்கக்கூடாது என்றும், ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் சமூக அக்கறையுடன் மாணவர்கள் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்தியா தற்போது உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக வேகமாக வளர்ந்து வருவதாகவும், பொருளாதாரத்தில் நான்காவது இடத்தில் உள்ள இந்தியா விரைவில் மூன்றாவது இடத்தை நோக்கி முன்னேறும் என்றும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்ததாகவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மருத்துவம் மற்றும் மருந்து உற்பத்தித் துறையில் இந்தியா முக்கிய பங்களிப்பை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் உலகின் முன்னணி பொருளாதார நாடாக இந்தியா உருவாகும் இலக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கல்வி மற்றும் மருத்துவத் துறைகளிலும் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதாக சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் கடந்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என குறிப்பிட்ட அவர், மாணவர்கள் தங்களது தனிப்பட்ட முன்னேற்றத்துடன் நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், இளைஞர்கள் மது மற்றும் போதைப் பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், போதைப் பழக்கம் உடல்நலம் மற்றும் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
பட்டம் பெற்ற பிறகும் கற்றல் தொடர வேண்டும் என அறிவுறுத்திய அவர், தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
புதிய தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் தனித்திறன் வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து அறிவை மேம்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்திற்கு தங்களது திறமையை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.