தவெக எம்.எல்.ஏ பேச்சைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்.. அதிரடியில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி!
ஜல்லிக்கட்டு குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு: மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக அறிவிப்பு
அண்மையில் சட்டசபையில் பேசிய சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கருப்பையா, "சோழவந்தானில் அரசு கல்லூரி வேண்டும், ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும். சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும். சோழவந்தான் தொகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களையும் தூர்வார வேண்டும். இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு" எனப் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், சட்டமன்றத்தில் சோழவந்தான் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் M.V. கருப்பையா, ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர்களை சீரழிப்பதாக தெரிவித்திருப்பது இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பாக அதிமுக மேற்கொண்ட அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளையும் தனது அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
அவரது அறிக்கையின்படி, விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது. அப்போது தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடையது எனக் கூறி தடையை நீக்க நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 21.1.2017 அன்று ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டு போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு தொடர்பான நடைமுறைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து விலங்கு நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், 18.5.2023 அன்று அரசியல் சாசன அமர்வு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லும் எனத் தீர்ப்பளித்ததாகவும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து அதிமுக மற்றும் தவெக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், மதுரையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பு: இந்த செய்தியில் இடம்பெறும் அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகள் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவையாகும்.