DEVELOPMENT

காஞ்சிபுரம் மிகப் பிரமாண்டமாக மாறப்போகுது மாநகராட்சியின் மாஸ்டர் பிளான்!

By ASWATHTHAMAN N • 2026-09-04 06:13 • 5 views   Share WhatsApp Share Facebook Share X
காஞ்சிபுரம் மிகப் பிரமாண்டமாக  மாறப்போகுது மாநகராட்சியின் மாஸ்டர் பிளான்!

காஞ்சிபுரம் மாநகராட்சி தமிழ்நாட்டின் 21 மாநகராட்சிகளில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான காஞ்சிபுரம் நகரத்தின் உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொள்கிறது. இம்மாநகராட்சி 21 அகடோபர் 2021 அன்று நிறுவப்பட்டது. இது 36.14 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாநகராட்சி 51 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரி செலுத்தாத வீடுகள், பட்டா இல்லாத வீடுகள் மற்றும் கோயில், வக்பு வாரிய நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்குக் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகளை வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விதிமுறைகளின்படி பட்டா மற்றும் வரி செலுத்தாத வீடுகளுக்கு இந்த இணைப்புகளை வழங்க முடியாத சூழல் நிலவி வந்ததால், பொதுமக்கள் கவுன்சிலர்களிடம் தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். மக்களின் இந்தத் தொடர் கோரிக்கையை ஏற்று, கவுன்சிலர்கள் வலியுறுத்தியதன் பேரில், மாநகமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி நகராட்சி நிர்வாக இயக்ககத்திற்கு அனுமதி பெற அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு
தற்போது காஞ்சிபுரத்தில் திருப்பாற்கடல் மற்றும் ஓரிக்கை பாலாறு திட்டங்கள் மூலம் தினமும் 23.5 மில்லியன் லிட்டர் நீர் மட்டுமே கிடைப்பதால், நபர் ஒருவருக்குத் தினமும் 89 லிட்டர் தண்ணீரே வழங்க முடிகிறது. சில இடங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் 2035-ஆம் ஆண்டில் மாநகராட்சியின் மக்கள் தொகை 4.36 லட்சமாக உயரும் என்றும், அப்போது நாளொன்றுக்கு 59 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

ரூ.572 கோடியில் புதிய திட்டப்பணிகள்
எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, உலக வங்கி நிதியுதவியுடன் 318 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் தற்போதைய 32,000 குடிநீர் இணைப்புகளை 55,000 ஆக உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல, 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது 60 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் ஓராண்டிற்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு அனுமதிக்குப் பின் புதிய இணைப்புகள்
மாநகராட்சி கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நகராட்சி நிர்வாக இயக்ககத்தின் அனுமதி பெறப்பட்ட பின்னரே பட்டா இல்லாத வீடுகளுக்குப் புதிய இணைப்புகள் வழங்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் மாநகராட்சி கூட்டம் நடைபெறும் நாளன்று மேயரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர்.

ASWATHTHAMAN N 0 followers