காஞ்சிபுரத்தில் திட்டமிடப்பட்ட புதுநகர் வளர்ச்சி மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சி திட்டத்தையும், ரத்து
பரந்துாரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை த.வெ.க., அரசு ரத்து செய்த நிலையில், காஞ்சிபுரத்தில் திட்டமிடப்பட்ட புதுநகர் வளர்ச்சி மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சி திட்டத்தையும், ரத்து செய்துள்ளது. நிதி பற்றாக்குறை மற்றும் நிர்வாக காரணங்களால் திட்டத்தை கைவிடுவதாக, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகரில் அதிகரித்து வரும் இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, புதிய துணை நகரங்களை ஏற்படுத்த, சி.எம்.டி.ஏ.,வின் இரண்டாவது முழுமை திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதன் அடிப்படையில், நீண்ட காலமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், துணை நகரம் என்பதை மாற்றி, புதிய நகர்ப்புற வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் இதை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருமழிசை, மீஞ்சூர் ஆகிய இடங்களில், புதிய நகர்ப்புற வளர்ச்சி திட்டம் செயல்படுப்படும் என, 2023ல் அறிவிக்கப்பட்டது.
இதில், காஞ்சிபுரம் புதுநகர் திட்டம், 62.78 சதுர கி.மீ., பரப்பளவில், ஏனாத்துார், கோனேரிகுப்பம் உள்ளிட்ட 18 கிராமங்களை உள்ளடக்கிய வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த, கலந்தாலோசகர் தேர்வு செய்யப்பட்டு, பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன.
பாதாள சாக்கடை மற்றும் குடிநீர், போக்குவரத்து வசதிகள் மேம்பாடு, தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, மேற்கண்ட பகுதிகளில் மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது. இது விஷயத்தில் விரிவான திட்ட அறிக்கை, வரைவு அறிக்கையும் தயாரிக்கப்பட்டு வந்தது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட புதிய நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு, மத்திய அரசின் நிதி பெற கடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், இத்திட்டம் ரத்து செய்யப்படுவது குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில், சி.எம்.டி.ஏ.,வில் நகர்ப்புற திட்டமிடல் பணிகளுக்கு பதிலாக, அதிக எண்ணிக்கையில் கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இத்திட்டங்களால், சி.எம்.டி.ஏ., நிதி, 3,900 கோடி ரூபாய் காலியானது. தவிர, அரசிடம் இருந்து, 200 கோடி ரூபாய் கடன் பெற்றும் சி.எம்.டி.ஏ., டெண்டர் விட்ட பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், புதிய நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் புது நகர் வளர்ச்சி திட்டத்தை கைவிடும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக, 2023ல் வெளியிடப்பட்ட அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்புகள், ரத்து செய்யப்பட்டுள்ளன.