RAILWAYS

காஞ்சிபுரம் மக்களுக்கு இனி Traffic தொல்லையே இருக்காது மூன்று ரயில் கடவுப்பாதைகளில் உயர்மட்ட மேம்பாலம்...

By ASWATHTHAMAN N • 2026-08-25 04:59 • 2 views   Share WhatsApp Share Facebook Share X
காஞ்சிபுரம் மக்களுக்கு இனி Traffic தொல்லையே இருக்காது மூன்று ரயில் கடவுப்பாதைகளில் உயர்மட்ட மேம்பாலம்...
காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம், கரியன்கேட், நத்தப்பேட்டை ஆகிய ரயில் நிலைய கடவுப்பாதைகளின் அருகே, உயர் மட்ட மேம்பாலங்கள் அமைய உள்ளன. இதன் மூலமாக, நீண்ட நேர போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என, வாகன ஓட்டிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக, செங்கல்பட்டு வரை மின்சார ரயில் வழித்தடம் உள்ளது. இதில், தக்கோலம், திருமால்பூர், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம், நத்தப்பேட்டை, வாலாஜாபாத், பழையசீவரம், பாலுார், வில்லியம்பாக்கம், ரெட்டிபாளையம் ஆகிய ரயில் நிலையஙகளில் இருந்து, தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த மின்சார ரயில் வழித்தடத்தில், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை கரியன்கேட்; காஞ்சிபுரம் - வைாயவூர் சாலை, காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம்; முத்தியால்பேட்டை - ராஜகுளம் புறவழி சாலை, நத்தப்பேட்டை ஆகிய மூன்று ரயில் நிலையங்களின் கடவுப்பாதைகளை கடப்பதற்கு, வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில், மின்சார ரயில் கடவுப்பாதை கடப்பதற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அடுத்த ரயில் வருவதற்குள் ரயில் கடவுப்பாதை கடக்கும் வாகனங்களை கடப்பதற்கு ரயில்வே ஊழியர்கள் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. சில நேரங்களில் கேட் மூட முடியாமல், ரயில் சிக்னலுக்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மேற்கண்ட ரயில் கடவுப்பாதை அருகே, உயர் மட்ட மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, காஞ்சிபுரம் திமுக எம்பி செல்வம் மற்றும் தற்போதைய காஞ்சிபுரம் எம்எல்ஏவும் அமைச்சருமான ரஞ்சித் குமார் ஆகியோர் ரயில்வே நிர்வாகத்திற்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அளித்தனர். இந்த மனுவைப் பரிசீலித்த சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம், இத்திட்டம் குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது. மாநில நெடுஞ்சாலை துறை பொறியியல் வல்லுனர்கள் மற்றும் ரயில்வே துறை பொறியாளர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். இதன் மூலமாக, மூன்று இடங்களில் மேம்பாலம் அமையவிருப்பது உறுதியாகி உள்ளது. ரயில் கடவுப்பாதை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு இனி தடையின்றி செல்ல வழி வகுக்கும் என, மகிழ்ச்சியில் உள்ளனர்.
ASWATHTHAMAN N 0 followers