கிளாம்பாக்கம் புறநகர் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தும் போக்குவரத்து நெரிசல் தீர்வதாக இல்லை!!
சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தும், சென்னை மற்றும் புறநகரில் போக்குவரத்து நெரிசல் தீர்வதாக இல்லை. தினமும் நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பேருந்துகளை சீராக இயக்க முடியாமல், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே செயல்படுத்தியதுபோல, பேருந்துகளை நான்கு இடங்களில் இருந்து பிரித்து இயக்க அரசு ஆலோசித்து வருகிறது.
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, கிளாம்பாக்கத்தில், 88 ஏக்கரில் பரப்பளவில், 393.71 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய பேருந்து முனையம், 2023 டிசம்பரில் திறக்கப்பட்டது.
இங்கு ஒரே நேரத்தில், 215 பேருந்துகளை நிறுத்தலாம்; தினமும் 3,500 பேருந்துகளின் சேவைகளை கையாள முடியும். இங்கிருந்துதான், 90 சதவீத அரசு பேருந்துகளும் பெரும்பாலான மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
புதிய பேருந்து நிலையம் திறந்து, மூன்று ஆண்டுகளை நெருங்குகிறது. ஆனாலும், மக்கள் வந்து செல்ல போதிய அளவில் வசதிகள் இல்லை. குறைந்தபட்சமாக மின்சார ரயில் நிலைய வசதியும் இல்லாதது, பயணியரிடம் கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர் விடுமுறை
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டமும், பல ஆண்டுகளாக கிடப்பிலேயே உள்ளது. வீடுகளில் இருந்து இந்த பேருந்து நிலையத்துக்கு வரும் மாநகர பேருந்துகளால் மட்டும், தேவையை பூர்த்தி செய்ய முடியாது.
இதனால், பொதுமக்கள் ஆட்டோ, கார்கள், இருசக்கர வாகனங்களில் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கடந்த விநாயகர் சதுர்த்தி, தொடர் விடுமுறை நாட்களில், போதிய பேருந்து இயக்காதது உள்ளிட்ட காரணங்களால், கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து, பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வரவுள்ளதால், போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பயணியர் தேவைக்கு பேருந்துகளை, இயக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், ஜி.எஸ்.டி., சாலையில் ஏற்படும் கடும் நெரிசலால், பேருந்துகளை உள்ளே கொண்டுவந்து இயக்க முடியவில்லை.
பரனுாரில் இருந்து கிளாம்பாக்கம் வருவதற்கு, இரண்டு மணிநேரம் ஆகிவிடுகிறது. இதற்கு தீர்வு காணக்கோரி, தமிழக போக்குவரத்து துறையிடம் வலியுறுத்தி உள்ளோம். முன்புபோல், தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பது, கூடுதல் இடவசதி ஏற்படுத்துவது போன்ற திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.