குட்காவுக்கு தடை இருந்தாலும் அதிகரிக்கும் வாய் புற்றுநோய்- அச்சுறுத்தும் புள்ளி விவரங்கள்.
நாடு முழுவதும் குட்கா மற்றும் இதர மெல்லும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், வாய்ப்புற்றுநோய் தொடர்ந்து அதிகரிப்பது, மிகப்பெரிய சுகாதார சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள் மற்றும் மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பதாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS) மற்றும் சர்வதேச புகையிலை பயன்பாடு (GATS) குறித்த ஆய்வு ஆகியவற்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வாய்ப்புற்று பாதிப்புகள் பதிவாகின்றன. அதேவேளையில், ஆண்டுதோறும் சுமார் 40,000 பேர் இந்நோயால் உயிரிழக்கின்றனர்.
குட்கா பொருட்களுக்கு தடை விதித்தாலும், பாக்கெட்டுகளில் விற்கப்படும் குட்காவை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. பான் மசாலாக்களில் புகையிலையை நேரடியாக கலப்பதற்கு உணவு பாதுகாப்புத் துறை தடை வித்ததாலும், விற்பனையாளர்கள், பான் மசாலாவையும், புகையிலையும் தனித்தனி பாக்கெட்டுகளில் விற்கிறார்கள்.
புகையிலை இல்லாத பான் மசாலா பாதுகாப்பானது என்று மக்கள் கருதுகிறார்கள். இது தவறான கருத்து என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பான் மசாலாவில் பயன்படுத்தப்படும் பாக்கு அல்லது சுபாரியில், புற்றுநோயை உருவாக்கும் மூலப்பொருட்கள் (குரூப் 1 கார்சினோஜென்) இடம்பெற்றுள்ளன. புகையிலையை தொடர்ந்து பயன்படுத்தும்போது, வாயின் உள்பகுதியில் உள்ள மென்தசைகள் பாதிப்படைந்து சப்மியூக்கஸ் ஃபைப்ரோஸிஸ் (OSF) என்ற நிலையை அடைகின்றன.
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கள்ளச்சந்தை மூலம் கிடைப்பது மற்றொரு கவலைக்குரிய விஷயமாக உள்ளது. குட்காவும் பிற மெல்லும் புகையிலை பொருட்களும் பான் மசலா கடைகள் மற்றும் மளிகைக் கடைகளில் ரகசியமாக விற்பனை செய்யப்படுகின்றன என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
தேசிய தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்(2023-24) புள்ளி விவரப்படி, டெல்லியில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 21.3 சதவீதம் பேரும், பெண்களில் 1.7 சதவீதம் பேரும் புகையிலையை பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய புற்றுநோய் சங்கத்தின் தலைவர் ஜோத்ஸ்னா கோவில் கூறுகையில், "வாய் புற்றுநோய் பாதிப்புகளில், சுமார் 60 சதவீதம் புகையிலையுடன் தொடர்புடையவை. புகையிலை பயன்பாடு, ஒரு தனிநபரின் ஆரோக்கியத்தை மட்டும் பாதிப்பதில்லை; அது குடும்பத்தின் மீது நிதிச் சுமையையும் ஏற்படுத்துகிறது. ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒருவருக்குப் புகையிலையை பயன்படுத்துவதால் தீவிர நோய் ஏற்படும்போது, நீண்டகால மருத்துவ சிகிச்சை, வருமான இழப்பு ஆகியவற்றால் நிதி மற்றும் உணர்வுரீதியான நெருக்கடி ஏற்படும்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையில், "2017-18-ஆம் ஆண்டில் இந்தியாவில் புகையிலை தொடர்பான நோய்கள் மற்றும் மரணங்களால் ஏற்பட்ட பொருளாதாரச் சுமை ரூ.1.77 லட்சம் கோடியாக இருந்தது.
மேலும், டெல்லியில் வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. 2023-ஆம் ஆண்டில் 2,429 ஆண்கள், 472 பெண்கள் என மொத்தம் 2,901 பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை, 2024-ஆம் ஆண்டில் 3,051-ஆக அதிகரித்தது; இதில், 2,569 பேர் ஆண்கள், 482 பேர் பெண்கள் ஆவர்.
புற்றுநோய் சிகிச்சைக்காக அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நோயாளிகளாலும் டெல்லியின் புள்ளிவிவரங்கள் அதிகரிக்கின்றன. டெல்லியில் உள்ள முக்கிய மருத்துவமனைகள் மற்றும் புற்றுநோய் மையங்களில் உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், நோய் முற்றிய நிலையில் உள்ள பல வாய் புற்றுநோய் நோயாளிகள் டெல்லியில் பதிவு செய்யப்படுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் அலட்சியம் வேண்டாம்
வாய் புற்றுநோய் முதியவர்களுக்கு மட்டுமே வருவதில்லை என்று புற்றுநோய் நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, "25 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் வாய்ப்புற்று நோயால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்" என்று இந்திய புற்றுநோய் சங்கத்தின் தலைவர் ஜோத்ஸ்னா கோவில் கூறுகிறார்.
இந்நிலையில், மக்கள் குட்கா மற்றும் புகையிலை பயன்பாட்டைக் கைவிட வேண்டும் என்றும், வாயில் தொடர்ந்து ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் தென்பட்டால் உனட்டியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் ஹரியாணாவின் ரோட்டக் நகரில் உள்ள PGIMS மருத்துவக் கல்லூரியின் பல் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் மஞ்சுநாத் அறிவுறுத்தி உள்ளார்.
இதேபோல், புகைப்பிடிப்பவர் மட்டுமன்றி குட்கா போன்ற மெல்லும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோருக்கும் வாய்ப்புற்று வரக்கூடும். எனவே, எந்தவொரு அசாதாரண மாற்றத்தையும் மருத்துவரை கொண்டு பரிசோதிக்க வேண்டும் என்று ரோட்டக் PGIMS மருத்துவ கல்லூரியின் பல் மருத்துவ துறை ஹர்னீத் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், ரோட்டக் நகரில் உள்ள PGIMS மருத்துவக் கல்லூரியின் பல் மருத்துவத் துறை, கிராமப் புறங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் வாய் புற்றுநோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் பரிசோதனை செய்துகொள்ளவும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறவும் அவர்களை ஊக்குவிக்கிறது.
புகையிலை பயன்பாட்டைக் கைவிட முயற்சிப்பவர்களுக்கு உதவும் வகையில், இதற்கென பிரத்யேக மையத்தின் மூலம் ஆதரவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாய் புற்றுநோயின் ஆரம்ப நிலை அறிகுறிகள் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வும், அது தொடர்பான கட்டுப்பாடுகளைச் செயல்படுத்துதலும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
புகையிலை பொருட்களை கட்டுத்தும் நடவடிக்கைகள் பயனுள்ளதாக மாற வேண்டும். அவை தடையின்றி கிடைப்பது, வாய் புற்றுநோய் பாதிப்பை குறைப்பதற்கான முயற்சிகளை பலவீனப்படுத்தும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
அச்சுறுத்தும் புள்ளி விவரங்கள்
சர்வதேச புகையிலை பயன்பாடு 2016-17 (GATS) ) ஆய்வின்படி, இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 26.7 கோடி மக்கள் புகையிலையைப் பயன்படுத்தினர். அவர்களில் 42.4 சதவீதம் பேர் ஆண்கள்; 14.2 சதவீதம் பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS) தரவுகளின்படி, தேசிய அளவில் 15 வயதுக்கு ஆண்களில் 38.1 சதவீதம் பேரும், பெண்களில் 8.4 சதவீதம் பேரும் ஏதேனும் ஒரு வகையில் புகையிலையைப் பயன்படுத்துவதாகக் காட்டுகின்றன.
உலக அளவில் 120 கோடிக்கும் அதிகமான மக்கள் புகையிலையைப் பயன்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, புகையிலையை பயன்படுத்துவதால் ஆண்டுதோறும் 70 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 16 லட்சம் பேர், மற்றவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பதால் உயிரிழக்கிறார்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளார்.