பரந்தூர் விமானநிலைய திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 2,500 ஏக்கர் தனியார் நிலங்களும், மீதமுள்ளவை அரசு நிலங்களும் அடங்கும்.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், அந்தத் திட்டத்தை நிறுத்துமாறு தமிழ்நாடு அரசு எந்தவித கோரிக்கையும் விடுக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) முன்வைத்த திட்டத்தின் அடிப்படையில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தது. முதல் கட்டத் திட்டத்தின் மதிப்பீட்டு செலவு ரூ.10,500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 2025 ஏப்ரல் மாதத்தில் கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்வியில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் தற்போதைய நிலை, கட்டம் வாரியான முன்னேற்றம், மொத்த திட்டச் செலவு, நிதி ஒதுக்கீடு மற்றும் பணிகள் நிறைவு பெறும் காலக்கெடு குறித்து விளக்கம் கோரப்பட்டது. மேலும், திட்டத்தின் இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதா என்பதும் கேட்கப்பட்டது.
இதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், 07.04.2025 அன்று பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், செப்டம்பர் 2024-ல் TIDCO சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் முதல் கட்டத் திட்டச் செலவு ரூ.10,500 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 2008-ஆம் ஆண்டின் Greenfield Airport Policy-யின்படி நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, நிதி திரட்டுதல், சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறுதல் உள்ளிட்ட பொறுப்புகள் சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது திட்ட உருவாக்குநருக்கே உட்பட்டவை என்றும், திட்டம் நிறைவு பெறும் காலம் பல நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணிகளைப் பொறுத்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துமாறு தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளதா என்ற கேள்விக்கு, அத்தகைய கோரிக்கை எதுவும் பெறப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் குறித்தும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி செலவில் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சுமார் 81% உட்கட்டமைப்பு பணிகளும், 71% நிதி முன்னேற்றமும் பதிவாகியுள்ளது. மழைநீர் வடிகால் அமைப்பு, டெர்மினல்-1 மேம்பாடு மற்றும் ஏர்சைடு உள்கட்டமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் ரூ.80.17 கோடி செலவில் புதிய ATC கோபுரம் மற்றும் தொழில்நுட்பக் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 76% உட்கட்டமைப்பு மற்றும் 49% நிதி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் புதிதாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ரூ.51.31 கோடி செலவில் எல்லைச் சுவர் அமைக்கும் பணிகளும், ரூ.13.71 கோடி செலவில் தற்போதைய டெர்மினல் கட்டிடத்தை விரிவுபடுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.