மின்விளக்கு மற்றும் சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் ‘குடி’மகன்கள் மதுக்கூடமாக மாறிய அவலம்...
காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் குடியிருப்புப் பூங்காவில் பராமரிப்பின்றி வளரும் புதர்கள்: மின்விளக்கு, சுற்றுச்சுவர் அமைக்க மக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 32/33 பிளாக்குகளுடன் மொத்தம் 2,112 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளில் வசித்தவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மாற்று வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தக் குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதை, இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், பூங்கா முறையாகப் பராமரிக்கப்படாததால் அங்கு களைச்செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.
மின்விளக்கு, சுற்றுச்சுவர் இல்லாததால் சிரமம்
பூங்காவில் மின்விளக்குகள் மற்றும் சுற்றுச்சுவர் இல்லாததால் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் போதிய வெளிச்சம் கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் பூங்காவைப் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் சிலர் பூங்காவை மது அருந்தும் இடமாகப் பயன்படுத்துவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
விஷ ஜந்துக்களால் மக்கள் அச்சம்
பராமரிப்பின்றி வளர்ந்துள்ள களைச்செடிகளுக்குள் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் இருக்கக்கூடும் என்பதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். பூங்காவை முறையாகப் பராமரித்து, பொதுமக்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, கீழ்கதிர்பூரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு வளாகப் பூங்காவில் மின்விளக்குகள் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து, களைச்செடிகளை அகற்றி, முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஊராட்சி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.