June 27, 2026

“ஜுலை 31 ஆம் தேதிக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யுங்கள்”..

அமைச்சர் வினோத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, 2026-2027ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
37 இத்திட்டம், குறுவை பருவத்தில் மாநிலத்தின் மாவட்டங்களை உள்ளடக்கிய 14 தொகுப்புகளில் செயல்படுத்தப்படும். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கார்/ குறுவை/ சொர்ணவாரி நெல் மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 9 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் அனைத்து குறுவை பருவ பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சுமார் 6 இலட்சம் ஏக்கரில் குறுவை “நெற்பயிர்” பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 2026 குறுவை பருவத்தில் நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், கம்பு, தட்டைப்பயறு, எள், பருத்தி, சாமை மற்றும் கொள்ளு ஆகிய 14 வேளாண் பயிர்களும், வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், கத்தரி, வெண்டை, மஞ்சள், தக்காளி, பூண்டு, இஞ்சி மற்றும் முட்டைக்கோஸ் ஆகிய 12 தோட்டக்கலைப் பயிர்களும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை ஜூன் 25 முதல் விவசாயிகள் தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். குறுவை நெற்பயிருக்கு ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.07.2026 ஆகும். இதர அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள் 2026 ஜூலை 31 ஆம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ், மாவட்டங்களின் பரிந்துரைப்படி மகசூல் இழப்பு, விதைப்பு / நடவு செய்ய இயலாத நிலை, விதைப்பு/ நடவு பொய்த்தல், பகுதி சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சி கால இடர் நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்ற இனங்கள் காப்பீடு செய்யப்படுகின்றன.
எனவே, கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள “விவசாயிகள் கார்னர்” வாயிலாக நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்வதற்கான இறுதி தேதி 31.07.2026 எக்காரணத்திற்காகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ வேளாண்மை அலுவலரையோ உதவி வேளாண்மை அலுவலரையோ வங்கி கிளைகளையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Written by

ASWATHTHAMAN N

District Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

INDIAN PRESS UNION

Indian Press Union (IPU) A National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved IPU MEDIA ASSOCIATION