TRAVEL AND TOURISM

E20 பெட்ரோல் வந்த நேரம்.. பெட்ரோல் வாகனங்களுக்கு குட்பை சொல்லும் இந்தியர்கள்..!!

By ASWATHTHAMAN N • 2026-09-09 05:50 • 4 views   Share WhatsApp Share Facebook Share X
E20 பெட்ரோல் வந்த நேரம்.. பெட்ரோல் வாகனங்களுக்கு குட்பை சொல்லும் இந்தியர்கள்..!!

இந்தியாவில் E20 பெட்ரோல் (20% எத்தனால் கலப்பு) பயன்பாட்டுக்கு வந்த பிறகு, எரிபொருள் செலவைக் குறைக்க மக்கள் எலக்ட்ரிக், சி.என்.ஜி மற்றும் ஹைப்ரிட் வாகனங்களை நோக்கி மாறத் தொடங்கியுள்ளனர்

இந்திய வாகன விற்பனை சந்தையில் கடந்த மாதம் மிகப்பெரிய ஒரு மாற்றம் நடந்துள்ளது. பொதுவாகவே இந்தியாவில் பெட்ரோலில் இயங்கும் கார்களுக்கு தான் டிமாண்ட் அதிகம். என்னதான் மின்சார கார்கள் , கேஸில் ஓடும் ஹைபிரிட் கார்கள் வந்தாலும் இந்தியர்களின் முதல் சாய்ஸாக இருந்தது பெட்ரோல் கார்கள் தான். ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது.

இந்தியாவில் வாகனங்களின் சில்லரை விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 17.51 சதவீதம் அதிகரித்தது. இந்த மாதத்தில் மட்டும் 24.23 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்திய வாகன விற்பனை வரலாற்றில் முதல்முறையாக, பெட்ரோல் வாகனங்களை பின்னுக்கு தள்ளி, மாற்று எரிபொருளில் இயங்கும் பயணியர் வாகனங்களின் விற்பனை, புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளது.

மொத்த வாகன விற்பனை அளவில் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களின் பங்கு 40.85 சதவீதமாகவும், மாற்று எரிபொருள் வாகனங்களின் பங்கு 41.95 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது. வாகன வினியோகஸ்தர் சங்கம் வெளியிட்ட தரவுகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த 41.95 சதவீதத்தில் 25.28 சதவீதம் சிஎன்ஜி/எல்பிஜி வாகனங்கள், 9.04 சதவீதம் ஹைபிரிட் வாகனங்கள், 7.63 சதவீதம் எலக்ட்ரிக் வாகனங்கள், 17.21 சதவீதம் டீசல் வாகனங்கள் ஆகும். அந்த வகையில் இந்தியர்கள் படிப்படியாக பெட்ரோல் வாகனங்களுக்கு குட்பை சொல்லி மற்ற வகை வாகனங்களுக்கு மாறி வருவது உறுதியாகியுள்ளது. E20 எனப்படும் எத்தனால் பெட்ரோல் பயன்பாட்டுக்கு மாறுவது தொடர்பாக மக்களிடையே இருக்கும் கவலைகள் மற்றும் செலவு குறைவு ஆகிய இரண்டு காரணங்களே பெட்ரோல் வாகன விற்பனை குறைந்து மற்ற வகை வாகனங்களின் விற்பனை அதிகரிக்க காரணம் என வாகன வினியோகஸ்தர் சங்கம் கூறுகிறது.

குறிப்பாக சிஎன்ஜி வாகனங்கள் பெட்ரோல் வாகனங்களுக்கு மிகப்பெரிய மாற்றாக உருவெடுத்துள்ளது. பெட்ரோலை விட சிஎன்ஜி வாகனங்களுக்கு செலவு குறைவு என்பது முக்கிய காரணம். இதனால் சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது, அதே நேரத்தில் மின்சார வாகன விற்பனையும் உயர்ந்திருக்கிறது. சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்கள் விற்பனையில் 71% பங்குடன் மாருதி சுசுகி முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதாவது மின்சார கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 43% பங்குடன் முன்னிலை வகிக்கிறது. இந்தியா பெட்ரோல், டீசலுக்கான கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலையில் பெட்ரோல் வாகனங்களுக்கு வரவேற்பு குறைவது ஒரு வகையில் நல்ல செய்தி.

கார் மட்டுமில்லாம்ல இருசக்கர வாகனங்களை பொறுத்தவரை, மின்சார வாகனங்களின் பயன்பாடு ஓராண்டுக்கு முன்பு 7.7% ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 10.7% ஆக உயர்ந்துள்ளதாம். ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்கு 65.3% ஆக இருந்தது; இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 56.6% ஆக மட்டுமே இருந்தது. வணிக வாகனங்களை பொறுத்தவரை, மிக குறைந்த அளவிலிருந்த மின்சார வாகனங்களின் பயன்பாடு 2.1 சதவீதத்தில் இருந்து, இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்து 5.2 சதவீதம் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதை உணர்த்துகிறது.இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்புகள் இன்னும் மேம்படுத்தப்பட்டால் எலக்ட்ரிக் வாகன விற்பனை இன்னும் அதிகரிக்கும்.

ASWATHTHAMAN N 0 followers