LATEST NEWS

காஞ்சிபுரம் மடாதிபதிகள் சாதுர்மாஸ்ய விரதம் வியாச பூஜையுடன் தொடக்கம்...

By ASWATHTHAMAN N • 2026-07-30 04:34 • 2 views   Share WhatsApp Share Facebook Share X
காஞ்சிபுரம் மடாதிபதிகள் சாதுர்மாஸ்ய விரதம் வியாச பூஜையுடன் தொடக்கம்...

காஞ்சிபுரம், ஜூலை 30: காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகிய இருவரும், குருபூர்ணிமா தினத்தையொட்டி, ஓரிக்கையில் உள்ள மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை வியாச பூஜையுடன் நேற்று தொடங்கினர்.

துறவியர்கள் தங்களது ஆன்மிக சாதனையை மேலும் வலுப்படுத்திக் கொள்ள அனுஷ்டிக்கும் விரதமாக சாதுர்மாஸ்ய விரதம் கருதப்படுகிறது. இந்த விரதத்தை காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகிய இருவரும் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் நேற்று தொடங்கினர்.

குருபரம்பரையினருக்கு செய்யப்படும் வியாச பூஜையுடன் சாதுர்மாஸ்ய விரதம் தொடங்கியது.

ஸ்ரீகிருஷ்ண பஞ்சகா, திராவிடாச்சார்ய பஞ்சகா, வியாச பஞ்சகா, குரு பஞ்சகா, சங்கராசார்ய பஞ்சகா உள்ளிட்ட ஐந்து வகையான குருமார்களை பூஜை மண்டபத்திற்கு விரத மந்திரங்களின் மூலம் அழைத்து, அவர்களுக்கு தனித்தனியாக சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை ஆகியவற்றை மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செய்தார்.

நிறைவாக, சங்கர மடத்தில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் பாரம்பரிய பூஜையான சாலக்கிராம பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு வியாச அட்சதை பிரசாதமாக வழங்கப்பட்டது.

முதல் நாள் விரத பூஜை நிகழ்ச்சியைக் காண அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

இந்த சாதுர்மாஸ்ய விரதத்தை மடாதிபதிகள் இருவரும் செப்டம்பர் 26-ம் தேதி, பௌர்ணமி தினத்தன்று நிறைவு செய்கின்றனர்.

ASWATHTHAMAN N 0 followers