"யூரியா உரத்தை அதிகப்படியாக பயன்படுத்துவது பய்ர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்"
யூரியா உரத்தை அதிகப்படியாக பயன்படுத்துவது பய்ர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்' என, விவசாயிகளுக்கு, வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரங்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், குறிப்பாக டி.ஏ.பி. உரம் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும் விவசாயிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். அதேபோல, கடைகளில் உரங்களை பதுக்குவதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால், கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் கையிருப்பில் உள்ள உரம் விபரங்களை வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து வகை உரங்களும் போதுமான அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது யூரியா 3,143.65 டன், டி.ஏ.பி., 636.35 டன், பொட்டாஷ் 187.60 டன், காம்ப்ளக்ஸ் உரம் 2,315.32 டன், சூப்பர் பாஸ்பேட் 191.35 டன் என, மொத்தம் 6,474.27 டன் உரங்கள் இருப்பில் உள்ளன.மேலும், பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பயன்படும் பல்வேறு வகை பூச்சிக்கொல்லி மற்றும் நோய் தடுப்பு மருந்துகளும் அனைத்து விற்பனை நிலையங்களிலும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது.
அதேபோல, யூரியா உரத்தை அதிகப்படியாக பயன்படுத்துவது பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மண் பரிசோதனை மற்றும் வேளாண் அலுவலர்களின் ஆலோசனைப்படி தேவையான அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் உயிர் உரங்கள், திரவ உயிர் உரங்கள், நுண்ணுாட்டக் கலவைகளும் போதுமான அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் உர விற்பனை நிலையங்களில் தேவையான உரங்களை பெற்றுக்கொள்ளலாம்.