காஞ்சியில் வரும் 23ம் தேதி நடைபெறும் மாரத்தான் போட்டிக்கு விண்ணப்பம் வரவேற்பு
காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் ‘பிட் - இந்தியா மாரத்தான் 2026’
மாரத்தான் என்பது சாலையில் தொடர்ந்து நெடுந்தொலைவு ஓடும் போட்டியாகும். கி.மு. 490ல் நடைபெற்ற மாரத்தான் போரில் பாரசீகர்களை தோற்கடித்த வெற்றிச் செய்தியை தெரிவிக்க, பிலிப்பிடீசு என்ற கிரேக்க வீரர் மாரத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு தொடர்ந்து ஓடிச் சென்றதாக ஒரு பிரபலமான கதை கூறப்படுகிறது. ஆனால், இந்தக் கதையை உறுதிப்படுத்தும் வரலாற்று ஆதாரங்கள் போதுமானதாக இல்லை.
கிரேக்க வரலாற்று அறிஞர் ஹெரோடோட்டஸ் குறிப்பிட்டுள்ளபடி, பெய்டிபைட்ஸ் என்பவர் ஏதென்சிலிருந்து ஸ்பார்டாவுக்கு ஓடிய தூதுவன் ஆவார். மாரத்தானிலிருந்து ஏதென்சுக்கு அவர் ஓடியதாகக் கூறப்படும் கதை பிற்கால எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதுபோன்ற குறிப்புகள் கி.பி. முதலாம் நூற்றாண்டில் புளூடார்ச்சின் On the Glory of Athens என்ற நூலிலும் காணப்படுகின்றன.
அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் தகவலின்படி, மாரத்தான் போர்க்களத்திலிருந்து ஏதென்சுக்கு இடையிலான தொலைவு சுமார் 34.5 கி.மீ. அல்லது 21.4 மைல்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.
மாரத்தான் போட்டி முதன்முதலில் 1896ஆம் ஆண்டு நடைபெற்ற நவீன ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்றது. பெண்களுக்கான மாரத்தான் போட்டி 1984ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்க காலத்தில் மாரத்தான் போட்டிக்கான ஓட்டத் தொலைவு நிரந்தரமாக நிர்ணயிக்கப்படவில்லை. போட்டி நடைபெறும் இடத்தைப் பொறுத்து தூரம் மாறுபட்டது.
காஞ்சிபுரத்தில் ‘பிட் - இந்தியா மாரத்தான் 2026’
காஞ்சிபுரம், ஆக. 14: காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள ‘பிட் - இந்தியா மாரத்தான் 2026’ போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குநர் குணாளன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சங்கரா பல்கலைக்கழகம் சார்பில் ‘பிட் - இந்தியா மாரத்தான் 2026’ என்ற பெயரில் மாரத்தான் ஓட்டப் போட்டி வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. உடல் நலம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படுகிறது.
ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு 3 கி.மீ. என போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் 20ஆம் தேதிக்குள் சங்கரா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு இணையதளம்: www.kanchiuniv.ac.in
உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.