விவசாயிகளுக்கு 'ஜாக்பாட்'| 3 ஏக்கருக்கு கீழ் நிலம் உள்ளவர்களுக்கு அரசே இலவசமாக உழுது தரும்!
கர்நாடகாவில் முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அரசு 100 நாட்களை கடந்த நிலையில், மாநிலத்தில் 3 ஏக்கர் அல்லது அதற்கும் குறைவாக நிலம் வைத்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, அரசே முற்றிலும் இலவசமாக உழுது தரும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
'முதலமைச்சர் நேகிலா யோகி திட்டம்'
விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு ‘முதலமைச்சர் நேகிலா யோகி திட்டம்’ (Chief Minister Negila Yogi Scheme) என்று பெயரிடப்பட்டுள்ளது.
டிராக்டர்கள் மற்றும் இதர நவீன விவசாயக் கருவிகளை சொந்தமாக வாங்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ வசதியில்லாத ஏழை விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
3 ஏக்கர் மற்றும் அதற்கு குறைவாக விவசாய நிலம் வைத்துள்ள அனைத்து சிறு, குறு மற்றும் ஏழை விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள்.
கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 59 லட்சம் விவசாயக் குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் நேரடியாகப் பலனடைவார்கள்.
இந்த திட்டத்தை முதற்கட்டமாக செயல்படுத்துவதற்காக கர்நாடக அரசு ரூ.152.28 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கியுள்ளது.
விவசாயிகளின் நிலத்தை உழுவதற்காக, அந்தந்தப் பகுதிகளில் உள்ள உள்ளூர் தனியார் டிராக்டர்களை அரசு வாடகைக்கு எடுக்கும் அல்லது வேளாண்மைத் துறையின் கீழ் உள்ள இயந்திரங்களை பயன்படுத்தும். இதற்கான முழு வாடகைச் செலவையும் அரசே நேரடியாக ஏற்கும் என்பதால் விவசாயிகளுக்கு ஒரு பைசா கூட செலவாகாது.
முதற்கட்டமாக 31 தாலுகாக்களில் அமல்
கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஜி.பரமேஸ்வரா, "இந்த திட்டம் முதற்கட்டமாக மாநிலத்தின் 31 மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு ஒரு தாலுகா வீதம் மொத்தம் 31 தாலுகாக்களில் சோதனை முயற்சியாக உடனடியாக தொடங்கப்பட உள்ளது.
இந்த முதற்கட்ட செயல்பாடு வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தாலுகாக்களுக்கும் விரிவுபடுத்தப்படும். மேலும், இந்த திட்டத்தை தடையின்றி செயல்படுத்த அரசு நேரடியாகவே 500 முதல் 1,000 புதிய டிராக்டர்களை கொள்முதல் செய்யவும் ஆலோசித்து வருகிறது" என்றார்.
கர்நாடக அரசுக்கு இந்த யோசனை எப்படி வந்தது?
கௌரிபிதனூர் தொகுதியின் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் காங்கிரஸில் இணைந்த கே.எச். புட்டசுவாமி கவுடா, தனது சொந்தத் தொகுதியில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு தனது சொந்தச் செலவில் டிராக்டர்களை ஏற்பாடு செய்து நிலத்தை இலவசமாக உழுது கொடுத்தார்.
இந்த முயற்சி அங்குள்ள ஏழை விவசாயிகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இதன் மூலம் ஈர்க்கப்பட்ட முதலமைச்சர் டி.கே.சிவகுமார், இந்தத் திட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் அரசு திட்டமாக மாற்ற உத்தரவிட்டு, தற்போது அரசாணையாக வெளியிட்டுள்ளார். கர்நாடக அரசின் இந்த திட்டம், அந்த மாநில விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் இயந்திரப் பற்றாக்குறை காரணமாக பயிரிடப்படாமல் தரிசாக கிடக்கும் விவசாய நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வருவதே இதன் முதன்மை நோக்கம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.