TRANSPORT AND INFRASTRUCTURE

காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் தனியார்கல்வி நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது கட்டுமானப் பணிகள் தொடக்கம்....

By ASWATHTHAMAN N • 2026-08-14 10:20 • 5 views   Share WhatsApp Share Facebook Share X
காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் தனியார்கல்வி நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது கட்டுமானப் பணிகள் தொடக்கம்....

காஞ்சிபுரத்தில் பெருகிவரும் வாகனங்கள், குறுகலான சாலைகள், காந்தி சாலையில் உள்ள பட்டு showrooms-களில் முறையான பார்க்கிங் வசதியின்மை மற்றும் பொன்னேரிக்கரை புதிய பேருந்து நிலைய வழக்கு முடிவுக்கு வந்தது போன்ற காரணங்களால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தினசரி அவதிப்படுகின்றனர்

காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில், 60 ஆண்டுகளுக்கு முன்பாக, 7 ஏக்கரில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் இப்போது பயன்பாட்டில் உள்ளது. இங்கு, தினமும் 300 பேருந்துகள் வந்து செல்கின்றன. நகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி மற்றும் மேற்கு மாவட்டங்களான கோவை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களுக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

பேருந்துகள் நகருக்குள் வந்து செல்வதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, ரெட்டை மண்டலம், ராஜவீதிகள், காமராஜர் சாலை போன்ற இடங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. 2017 முதல் கீழ்கதிர்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பேருந்து நிலையத்துக்கு இடம் தேர்வு செய்த பிறகும், நிலத்தை கையகபடுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இறுதியாக பொன்னேரிக்கரையில் பக்தவத்சலம் கல்வி அறக்கட்டளை பயன்பாட்டில் இருந்த இடத்தை, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ததில், அரசு நிலம் என்பதற்கான பல்வேறு ஆவணங்கள் கிடைத்ததால், 2024ல் அப்போதைய காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, பொன்னேரிக்கரையில் உள்ள 19 ஏக்கர் நிலத்துக்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதில், பேருந்து நிலையம் அமைவதற்கு, 11 ஏக்கர் நிலத்தையும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒப்படைக்கப்பட்டு, அந்த இடத்திற்கான உள்நுழைவு அனுமதியையும், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சிக்கு வழங்கியது. மீதமுள்ள 8 ஏக்கரில், பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, பக்தவத்சலம் கல்வி அறக்கட்டளை நிர்வாகம், 2025ல் பொங்கல் பண்டிகை சமயத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இடைக்கால உத்தரவையும் பெற்றது.

இதனால், பேருந்து நிலையம் கட்டுவதில் இழுபறி ஏற்பட்டது; டெண்டர் எடுத்த நிறுவனமும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அனைத்து வழக்குகளையும் இந்தாண்டு ஜனவரி மாதம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கொடுக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவுகளை நீக்கியும், அங்குள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றலாம் என்ற உத்தரவையும் பிறப்பித்து உள்ளது.

ஆனால், பக்தவத்சலம் கல்வி அறக்கட்டளை நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதன் காரணமாகவும், பேருந்து நிலையம் கட்ட முடியாமல் இருந்தது. இடையே, பேருந்து நிலையம் அமையும் இடத்தை சர்வே செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த பணிகளும் மேற் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நீதிபதிகள் பர்டிவாலா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பக்தவத்சலம் கல்வி அறக்கட்டளையின் மேல்முறையீட்டு வழக்கில், அடிப்படை முகாந்திரம் இல்லை என கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதனால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தும் வகையில், பொன்னேரிக்கரையில் உள்ள 19 ஏக்கர் இடத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யஸ்ரீ, மாநகராட்சி கமிஷனர் வினோத் மற்றும் வருவாய் துறையினர், அந்த இடம் அரசுக்கு சொந்தம் என பேருந்து நிலையம் அமைய உள்ளதாக பேனர் வைத்துள்ளனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகாவிடம் கேட்டபோது, ''உச்ச நீதிமன்றத்தில், அவர்களின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, திட்டமிட்டப்படி பொன்னேரிக்கரையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

ASWATHTHAMAN N 0 followers