பள்ளி வளாகங்களில் விழிப்புணர்வு முழக்கம் – போதைக்கு எதிராக மாணவர்கள் உறுதி

By MYTHILI • 2026-08-11 04:40 • 2 views   Share WhatsApp Share Facebook Share X
பள்ளி வளாகங்களில் விழிப்புணர்வு முழக்கம் – போதைக்கு எதிராக மாணவர்கள் உறுதி

திருவள்ளூர்:
பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். வடகரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மாணவர்களின் கவனத்தை ஈர்த்தது.

பள்ளி வளாகத்திற்குள் நடைபெற்ற பேரணியில் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்களை முழக்கங்களாக எழுப்பினர். போதைப்பொருளிலிருந்து விலகி, ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை மாணவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிகழ்ச்சிகள் 10.08.2026 அன்று வடகரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடகரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்றன.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – திருவள்ளூர் மற்றும் Shelter Trust இணைந்து, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் “Nasha Mukt Bharat Abhiyaan – Drug-Free Tamil Nadu Campaign” (போதையில்லா தமிழ்நாடு பிரச்சாரம்) என்ற விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன.

வடகரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “சிங்கப்பெண்” துணை காவல் ஆய்வாளர் திருமதி ஜெயந்தி பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர்களிடம் உரையாற்றிய அவர், போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள், சட்டரீதியான விளைவுகள் மற்றும் மாணவர்கள் போதைப்பழக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார்.

நிகழ்ச்சியில் திருவள்ளூர் குழந்தைகள் நலக்குழு தலைவர் திரு. S. Thenpandian மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி V. Ezhilarasi ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினர்.

மேலும், Shelter Trust நிர்வாக அறங்காவலர் திரு. A.D. Solomon Raj விருந்தினர்களை கௌரவித்தார். மனநல ஆலோசகர் திரு. Karthik மற்றும் திரு. B. Kumar ஆகியோர் மாணவர்களிடம் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு காணொளி திரையிடப்பட்டது. தொடர்ந்து, திரு. P. Ramesh Kumar மற்றும் குழுவினர் வழங்கிய சிறப்பு பொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம் போதைப்பொருளின் தீமைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

நிகழ்ச்சியின் நிறைவில், சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். போதைப்பொருளைத் தவிர்த்து, தங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் DCPU மற்றும் Child Line பணியாளர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சுமார் 700 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இளம் தலைமுறையினரிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கும், போதை இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டியது.

MYTHILI 0 followers