நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
கோதாவரி-காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்
தென்னிந்திய மாநிலங்களின் நீண்டகால நீர்ப் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில், 'கோதாவரி-காவிரி-குண்டாறு' நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் மேற்பரப்பு நீர் வளம் குறைவாக உள்ளதையும், மாநிலத்தின் நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு அண்டை மாநிலங்களையே சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளதையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாடு இயல்பாகவே மேற்பரப்பு நீர் வளங்களில் பற்றாக்குறையைக் கொண்ட மாநிலமாக இருப்பதாகவும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் நிலத்தடி நீர் வளம் பல பகுதிகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் நீர் வளங்களைப் பெருக்குவதற்கான முக்கிய நீண்டகால வாய்ப்பாக கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் இருப்பதாகவும், மாநில மக்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இத்திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் தொடர்ந்து நீர்ப் பற்றாக்குறை மற்றும் வறட்சியால் பாதிக்கப்படும் நிலையில், இத்திட்டம் நீண்டகால தீர்வாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளக் காலங்களில் கிடைக்கும் உபரி நீரை நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்குத் திருப்பிவிடுவதற்கும் இத்திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக தேசிய நீர் மேம்பாட்டு முகமை (NWDA), கோதாவரி-பெண்ணாறு-பாலாறு-வெள்ளாறு இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரித்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய திட்ட அறிக்கையில் உள்ள இணைப்பு பாதை காவிரி ஆற்றை அடைவதற்கு சில கிலோமீட்டர் முன்பே முடிவடைவதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கு பதிலாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோதாவரி-காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ளுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை ஆக்கப்பூர்வமான ஆலோசனை மற்றும் கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தின் மூலம் தீர்த்து இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இதற்கு 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்' என்ற அந்தஸ்தை வழங்கி விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
மேலும், ஒன்றிய அரசு மற்றும் பயன்பெறும் மாநிலங்களின் பங்கேற்புடன் ஒரு சிறப்பு நோக்கு அமைப்பை (Special Purpose Vehicle) உருவாக்கி, ஒருங்கிணைந்த முறையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கலாம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டம் தொடர்பாக ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகம் மற்றும் தேசிய நீர் மேம்பாட்டு முகமை, பயன்பெறும் மாநிலங்களுடன் ஆலோசனைகளை விரைவுபடுத்தி நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கட்டளை கதவணை வரை இணைப்பை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமரிடம் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து விரைவான முறையில் செயல்படுத்தவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிப்பதற்கான சிறப்பு நோக்கு அமைப்பை உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்னிந்தியாவின் நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளின் நீண்டகால நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், நீர் வளங்களை சமமாகவும் நிலையான முறையிலும் பயன்படுத்துவதற்கும் இத்திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.